இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதிக்குள்

02 Nov, 2021 | 04:58 AM
image

(ஷார்ஜாவிலிருந்து நெவில் அன்தனி)


இங்கிலாந்துக்கு எதிராக ஷார்ஜாவில்  திங்கட்கிழமை (1) இரவு நடைபெற்ற குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 26 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

இப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மாத்திரம் இங்கிலாந்துக்கு 125 ஓட்டங்களைத் தாரைவார்த்ததாலேயே இலங்கை தோல்வியைத் தழுவியது.


ஜொஸ் பட்லர் குவித்த அபார சதம், அவரது அணியினரின் துல்லியமான பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவை இங்கிலாந்தை இலகுவாக வெற்றிபெறச் செய்தது.


இதன் மூலம் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் 4ஆவது தொடர்ச்சியான வெற்றியுடன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களைக் குவித்தது.


ஆரம்ப வீரரான ஜொஸ் பட்லர் கடைசிவரை துடுப்பெடுத்தாடி 67 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 6 பவுணட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.


துஷ்மன்த சமீர கடைசி ஓவரை வீச ஆரம்பித்தபோது 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜொஸ் பட்லர், 4, 2, 2, 0, 0, 6 என 14 ஓட்டங்களை விளாசி சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
அத்துடன் நடப்பு இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பெறப்பட்ட முதலாவது சதமாகவும் இது அமைந்தது.


ஜொஸ் பட்லர் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கொடுத்த மிகவும் கடினமான பிடியை பெத்தும் நிஸ்ஸன்க கடும் முயற்சியின் பின்னர் தவறவிட்டார்.


இங்கிலாந்தின் மற்றைய ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் (9) மற்றும் டேவிட் மாலன் (6), ஜொனி பெயார்ஸ்டோவ் (0) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழக்க 6ஆவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 35 ஓட்டங்களாக இருந்தது.


அத்துடன் 10 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் அதரடி ஆட்டத்தில் இறங்கிய இங்கலாந்து எஞ்சிய 10 ஓவர்களில் மேலதிகமாக ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 116 ஓட்டங்களைக் குவித்து மொத்த எண்ணிக்கையை 163 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.


இதனிடையே ஜொஸ் பட்லரும் அணித் தலைவர் ஒய்ன் மோர்கனும் 4ஆவது விக்கெட்டில் 78 பந்துகளில் பெறுமதிமிக்க 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஒய்ன் மோர்கன் 36 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.


மொயின் அலி 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.


இலங்கையின் வனிந்து ஹசரங்க திறமைiயாக பந்துவீசி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் தனது 30ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 50 விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.


164 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.


முதலாவது ஓவரிலேயே பெத்தும் நிஸ்ஸன்க (1) ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை இலங்கையை தடுமாற்றத்துக்கு உள்ளாக்கியது.


குசல் பெரேரா (7) மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.


சரித் அசலன்க (21), அவிஷ்க பெர்னாண்டோ 13), பானுக்க ராஜபக்ஷ (26) ஆகிய மூவரும் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழக்க 11ஆவது ஓவரில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த வனிந்து ஹசரங்கவும் அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் சிறுக சிறுக ஓட்டவேகத்தை அதிகரித்து அதிரடியில் இறங்கி இலங்கைக்கு நம்பிக்கையைக் கொடுத்தனர்.


இவர்கள் இருவரும் 36 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது வனிந்து ஹசரங்க 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

வனிந்து ஹசரங்க உயர்த்தி அடித்த பந்தை நோக்கி 25 யார் தூரம்வரை ஓடிய ஜேசன் ரோய் பந்தை அபாரமாகப் பிடித்தார். ஆனால். அவர் எல்லைக்கோட்டுக்கு மிக அருகாமையில் சென்றதால் பந்தை மாற்றுவீரர் பில்லிங்ஸை நோக்கி வீச அவர் பந்தைப் பிடித்து ஹசரங்கவை ஆட்டமிழக்கச்செய்தார்.


ஹசரங்கவைத் தொடர்ந்து சொற்ப நேரத்தில் அவசரப்பட்டு ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்த தசுன் ஷானக்க அநாவசியமாக 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அத்துடன் இலங்கையின் எதிர்பார்ப்பு அற்றுப் போனதுடன் இலங்கை இரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.


தொடர்ந்து துஷ்மன்த சமீர (4), சாமிக்க கருணாரட்ன (0), மஹீஷ் தீக்ஷன (2) ஆகியோர் ஆட்டமிழக்க இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது. லஹிரு குமார ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.


இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் ஜோர்டன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18
news-image

சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

2022-12-07 09:41:16
news-image

பெனல்டியில் ஸ்பெய்னை வென்ற மொரோக்கோ கால்...

2022-12-06 23:45:38
news-image

போர்த்துக்கல் - சுவிட்சர்லாந்து மோதும் போட்டியுடன்...

2022-12-07 10:09:53
news-image

எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது...

2022-12-06 19:27:29
news-image

மொரோக்கோவை 16 அணிகள் சுற்றில் இன்று...

2022-12-06 19:28:13
news-image

ஜெவ்னா கிங்ஸ் - கோல் க்ளடியேட்டர்ஸ்...

2022-12-06 15:26:45