தமிழகத்தில் உள்ள இருளர் பழங்குடி இன மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் நடிகர் சூர்யா வழங்கினார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் 'ஜெய் பீம்'. 1995 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் தயாராகியிருக்கிறது. இதனை ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநருமான த.செ. ஞானவேல் இயக்கியிருக்கிறார். 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் நவம்பர் இரண்டாம் திகதியன்று அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்தத் திரைப்படத்தில் பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினரான இருளர் சமூகத்தின் வாழ்வியலும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இதில் வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். 

இந்த உண்மை சம்பவத்தின் பின்னணியில் பணியாற்றிய முன்னாள் நீதியரசர் சந்துரு, கல்வியாளர் பிரபா மணி, பழங்குடி இருளர் நலச்சங்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் அவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி செய்திருக்கிறார். இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். இதன் போது நடிகர் சூர்யா, ஜோதிகா, தயாரிப்பாளர் கற்பூர சுந்தரபாண்டியன், நீதியரசர் சந்துரு, இயக்குநர் ஞானவேல் மற்றும் பழங்குடி இருளர் இன நலச் சங்கத்தின் நிர்வாகிகளும் பங்குபற்றினர்.