இலங்கை அரசியலில் ஓர் ஆயுதமாக வெறுப்புப் பேச்சு

Published By: Priyatharshan

31 Oct, 2021 | 04:24 PM
image

வீ.பிரியதர்சன்

போருக்கு பின்னரான இலங்கையில் சமாதனமும் நல்லிணக்கமும் நிலவுவதாக சொல்லப்படுகின்ற போதிலும் நாட்டில் வாழும் மக்கள் நிம்மதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றார்களா என்ற கேள்வி சிறுபான்மையின மக்களிடத்தில் அடிக்கடி எழுகின்றது.

இலங்கையில் 30 வருடகால இன வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் 10 வருடங்களுக்கு மேல் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை. நாட்டில் போர் நீங்கினாலும் தாக்குதல்கள் முற்றுப்பெற்றுவிட்டாலும் பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியன்று 30 வருடகால இனவாதப் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், அநுராதபுரம் குருநாகல் சந்தியில் அநுராபுரம் பழைய நகர் எல்லாளன் சமாதிக்கு 50 மீற்றருக்கு அண்மையில் ஓட்டுப்பள்ளம் தர்கா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமையன்று தாக்கப்பட்டது முதல் இன்று வரை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும் வெறுப்புப் பேச்சுக்களும் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன.

அண்மைக்கால வெறுப்புப் பேச்சுக்களால் வெகுவாகவே பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. வெறுப்புப் பேச்சு என்பது இலங்கையில் இனங்களுக்கிடையில் தாக்குதலை மேற்கொள்ளும் ஒரு அரசியல் ஆயுதமாக பெரும்பான்மையினத்தவர்களால் தீவிரமாக உபயோகப்படுத்தப்படுகின்றது.

பொது பலசேனா, ராவணா பலய மற்றும் சிஹல ராவய, மஹாசோன் பலகாய போன்ற அமைப்புக்கள் 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இணையத் தளங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டங்கள், பிரச்சாரங்கள் மூலமாகவும் ஆரம்பித்த இந்த வெறுப்புப் பேச்சுக்கள், இறுதியில் ஞானசார தேரரின் மூலம் பூதாகாரமாக உருவெடுத்து, நாட்டை கலவர பூமியாக்கியதை எவரும் மறந்து விடமுடியாது.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி தர்கா நகரைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்கள் பௌத்த மதகுரு ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனைக் கண்டித்து சில பௌத்த பிக்குகளின் தலைமையில் அளுத்கம நகரில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய ஞானசார தேரர்

“நாட்டில் இருப்பது சிங்கள பொலிஸ் மற்றும் இராணுவம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இன்றிலிருந்து ஒரு மராக்கர்களோ, பறங்கியர்களோ சிங்களவர்கள் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்று தெரியாது. சில சிங்களவர்கள் உள்ளனர். ... வெட்டிக்கொண்டால் ..... எனக் கூற முடியும். ஆனால் இவர்கள் அவ்வாறானவர்கள் அல்ல. சிங்களவர்கள் போன்றுள்ள சிங்கள தம்பிக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முழு சிங்களவர்களையும் .... பண்ணுவதற்கே முற்படுகின்றனர். எனவே இது சிங்கள நாடு , சிங்கள தலைவனே எமக்குத் தேவை . அதற்காக வாக்களியுங்கள். ஒரு நாட்டில் ஒரு சட்டமே இருக்க முடியும். இரு திருமணங்கள் செய்தால் சிறை. ஆனால் முஸ்லிம்களுக்கு அவ்வாறில்லை. வர்த்தக நிலையங்களோ ஏனைய நிலைங்களோ முஸ்லிம்களுக்கு வழங்க கூடாது.” என்று உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இதனால், வன்முறை வெடித்தது.

அளுத்கம, பேருவளை, தர்காநகர் பிரதேசங்கள் பௌத்த கடும்போக்கு வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் முஸ்லிம்களில் பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி ஒளிந்து கொண்டார்கள். இந்த வன்முறையில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் உயிர் இழந்தார்கள். சுமார் 80 பேர் காயங்களுக்குள்ளானார்கள். தாக்குதல் இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், தாக்குதல்கள்தாரிகள் கைது செய்யப்படவில்லை.

ஞானசார தேரரைத் தொடர்ந்து ‘சிங்களே’ அமைப்பின் தலைவர் டான் பிரியசாத்தும் கலவரம் ஏற்படும் அளவுக்கு வெறுப்புப் பேச்சுகளைப் பொதுஇடங்களில் பேசியிருந்தார்.

நாட்டில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியுடன் வெறுப்புப் பேச்சும் வளரத்தொடங்கியது. வெறுப்புப் பேச்சை பரப்பும் முக்கிய ஊடகமாக, சமூகவலைத்தளங்களே காணப்படுகின்றன.

பெரும்பான்மையின பாடகரான மதுமாதவ அரவிந்த சமூக ஊடகமொன்றில் காணொளி மூலம் கருத்துத்துத் தெரிவிக்கையில்,

“எம்மை வெட்டினாலும் சிங்கள இரத்தமே ஓடும். கட்சிக்காரர்கள் அல்ல. அசாத் சாலி மற்றும் முஜிபுர் ரஹ்மான் யாருக்கு பொருட்கள் வழங்கினார்கள் என யாரும் கேள்வி எழுப்பவில்லை. காத்தான்குடியில் என்ன நடக்கின்றது என யாரும் கேட்கவில்லை. எனவே எம்மையும் யாரும் கேட்கக்கூடாது. நாங்கள் சிங்கள மக்களுக்கு மாத்திரமே பொருட்களை வழங்குவோம்.“ எனத் தெரிவித்திருந்தார்.

  

தேர்தல் காலத்தை மையப்படுத்தியதாகவே உள்நாடு முதல் உலக நாடுகள் வரை வெறுப்புப் பேச்சுகளுக்கு முன்னுரிமை இருப்பதை அவதானிக்கலாம். ஆனால், தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இதன் தீவிரம் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றது.  

“இலங்கை மாத்திரமல்ல தெற்காசியாவை எடுத்துக்கொண்டால் எத்தனையோ அரசாங்கங்கள் தாங்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு வெறுப்புப் பேச்சை பயன்படுத்தியுள்ளன. முக்கியமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு என்பது தாராளமாக பயன்படுத்தப்படுகின்றது. சிறுபான்மை மக்களுக்கிடையில் இருக்கும் பாரபட்சங்களை மேலும் அதிகரித்து அதனூடாக வெறுப்புப் பேச்சை உருவாக்கி அதனடிப்படையில் அரசாங்கங்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன. இதேவேளை, அதிகாரத்திற்கு வருவோருக்கு ஆட்சியை கொண்டு நடத்துவதற்கு வேறெந்த வழிமுறைகளும் இல்லாத நிலையிலும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் இந்த வெறுப்புப் பேச்சு என்பது இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது.” என சட்டத்தரணியும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் கூறுகின்றார்.

இலங்கை அரசியல் சூழலில், இந்த வெறுப்பு பேச்சுக்கள் தேர்தல் காலத்துக்கு அப்பாலும் அரசியலில் நிலைத்திருப்பதை அவதானிக்கலாம்.  

எது எவ்வாறாயினும், இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை தடுக்கும் தனியான சட்டங்களைக் கொண்டு வருவதனால் மாத்திரம் அதை நிறுத்தி விட முடியாது.

“இலங்கையில் சட்டங்கள் மற்றும் கொள்கைகளால் சிறுபான்மை இனத்தவர்களை பெரும்பான்மையினம் அடக்குவதுடன் பயங்கரவாத தடைச்சட்டம், சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சமவாயச்சட்டம், குற்றவியல் தண்டனைச்சட்டக் கோவைச் சட்டம் ஆகிய சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும் பெரும்பான்மையினத்தவர்களுக்கு சார்பாகவுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  இவ்வாறான சட்டங்கள் பாகுபாடாகவே பயன்படுத்தப்படுகின்றன” என சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன் கூறுகின்றார்.

அம்பாறை நகரிலுள்ள உணவுக் கடையொன்றில் முஸ்லிம் கடைக்காரர்கள் "ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தை" கலப்பதாக குற்றஞ்சாட்டி பரவிய வெறுப்புப் பேச்சையடுத்து குறித்த கடையின் உரிமையாளர் தாக்கப்பட்டார். இவ்வாறு தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாவர்.

2018 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் திகதி கண்டி – திகனவில் பௌத்த இனவாதக் கும்பலினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

திகனவில் மார்ச் மாதம் 05ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை தீவிரமாக இடம்பெற்ற தாக்குதல்களில் முஸ்லிம்களின் 445 வீடுகளும், 24 பள்ளிவாசல்கள், 65 வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பலவும் தீயிட்டு சேதமாக்கப்பட்டன. இரண்டு பேர் உயிர் இழந்திருந்தனர்.

இத்தாக்குதல்கள் குறித்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்களில் உண்மையான தாக்குதல்தாரிகள் இன்று வரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை. 

திகன வன்முறையின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித்வீரசிங்க உட்பட 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். ஆயினும், அமித்வீரசிங்க 2019 ஜூன் 04 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதன் பின்னர், குருநாகல், மினுவாங்கொடை உட்பட சுமார் 30 பிரதேசங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். வழக்கம் போலவே முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தில் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

பௌத்த கடும்போக்குவாத தேரர்களினதும், அமைப்புக்களினதும் வழிகாட்டுதலில் இத்தாக்குதல்கள் நடைபெற்றன. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், வீடுகளும், பள்ளிவாசல்களும் இலக்கு வைக்கப்பட்டன. முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். 

நாட்டில் போருக்குப் பின்னரான சுமார் 10 வருடத்திற்கு மேலான காலத்தில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் வன்முறைகள், மோதல்கள் இடம்பெறுவதற்கு வெறுப்புப் பேச்சுக்களே அத்திபாரமாக அமைகின்றன என்பதை இடம்பெற்ற இன வன்முறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் மோதல்களும் வன்முறைகளும் உருவாகுவதற்கும் மற்றும் மனிதனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கும் முக்கிய கருவாக வெறுப்புப் பேச்சுக்களே அமைகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சானது கடந்த 2013 ஆம் ஆண்டில் இஸ்லாமிய மதம் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, முஸ்லிம்களின் நுகர்வுக்கு அனுமதிக்கப்பட்ட உணவைக் குறிக்கும் 'ஹலால்' சான்றிதழை முடிவுக்கு கொண்டுவர சிங்கள பௌத்த தேசியவாத குழுக்கள் வெற்றிகரமாக முயன்றதிலிருந்து ஆரம்பித்தது.

குறித்த 'ஹலால்' சான்றிதழுக்கு எதிரான பிரசாரமானது பல பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வணிக நிலையங்கள் மீது தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பாக காணப்பட்ட அசமந்தப் போக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக தண்டனையின்றி வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கான ஒரு சமிக்ஞையை வழங்கியது.

“ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது ஹலால் சான்றிதழை வைத்து வெறுப்புப் பேச்சை ஆரம்பித்த பெரும்பான்மையின மதவாதிகள் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தின் மீது தொடர்ச்சியாக பெரும்பான்மை மக்கள் மத்தியில் வெறுப்புப் பேச்சை பரப்பி வந்தனர். இதனால் நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்பு ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புப் பேச்சு என்பது நாளடைவில் அரசியலுக்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இலங்கை ஒரு தனி சிங்கள பௌத்த நாடு இங்கு சிறுபான்மையினத்தவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்ற நிலையில் பேசப்பட்டது. இந்த கொள்கையை வைத்து நாட்டில் இருக்கும் சிறுபான்மை இனங்கள் மீது வெறுப்புப் பேச்சை பெரும்பான்மையினத்தவர்கள் பயன்படுத்துகின்றனர்” என முஸ்லிம் கவுன்ஸிலின் உபதலைவரான  ஹில்மி அஹமட் குறிப்பிடுகின்றார்.

வெறுப்புப் பேச்சை ஆதாரமாக வைத்து சிறுபான்மையினத்தவர்களான தமிழ், முஸ்லிம்கள் மீதான கைதுகளும் தாக்குதல் சம்பவங்களும் இலங்கையில் தொடர்கதையாக இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இலங்கையில் உள்ள சட்டங்களும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுகின்றது. ஆனால் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டாலோ இன வன்முறைகளைத் தூண்டினாலோ அவர்கள் மீது சட்டங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை. பிரயோகிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஏற்றவாறு சட்ட துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அந்த சட்டங்கள் அவர்களுக்கு சார்பானதாக அமைகின்றன.

“இலங்கையில் தற்போதைய அரசாங்கம் கூட மக்களிடம் உள்ள ஆதரவு குறைவதாக  தென்பட்டால் உடனடியாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை பயன்படுத்தி தங்கள் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதெனக் கூறும் அம்பிகா சற்குணநாதன், ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை வெறுப்புப் பேச்சில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டங்களை பிரயோகிக்காது மாற்றுக் கருத்துக்களை தெரிவிப்போர் மீதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதும் முஸ்லிம் சமூகத்தினர் மீதும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான ஆயுதமாக சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.” என்கிறார் அம்பிகா சற்குணநாதன்.

சமூக வலைதளங்களில் 'வெறுப்புப் பேச்சு' பதிவுகள் மற்றும் முஸ்லிம் விரோதப் போக்குகள் அதிகரித்தன. தாக்குதல்களுக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதத் தடைச்சட்டம், சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சமவாயச்சட்டம், குற்றவியல் தண்டனைச்சட்டக் கோவையின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

 இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப - முஸ்லிம் மக்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு எனும் ஆயுதத்தை தேவைக்கேற்ற வகையில் உபயோகித்து வருகின்றது.

கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான கட்டாய தகனக் கொள்கையில் இது தெளிவாக புலனாகியது. இறந்தோர் உடல்களை எரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ள நிலையில், கொரோனா காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதால் கொரோனா தொற்று மேலும் பரவும் என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகள் இல்லாத போதிலும் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன. 

“கொரோனா சுகாதார தனிமைப்படுத்தல் சட்டமானாலும் சரி பொது பாதுகாப்பு கட்டளைச்சட்டமானாலும் சரி இவை சிறுபான்மை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டன.

சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சமவாயச்சட்டத்தின் 3 ஆம் பிரிவு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு ஒரு திட்டவட்டமான வரைவிலக்கணம் இல்லை.” என்கிறார் சட்டத்தரணி குகதாசன் ஐங்கரன். 

இதேவேளை, சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடந்த காலங்களாக வெறுப்புப் பேச்சுக்களை பேசியும் பல இன வன்முறைக்கு காரணமாகவும் இருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரை 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான செயலணியின் தலைவராக நியமித்துள்மை சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கையுடையது. அந்தவகையில் நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக கூறமுடியாது. சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுகின்றது” என்கிறார் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்.

இனங்களுக்கிடையில் வெறுப்புப்பேச்சை பேசி வன்முறைகளை தூண்டிய ஞானசார தேரர் போன்றவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள்  வழங்கப்படும் போது சிறுபான்மை மக்களின் கருத்துச் சுதந்திரம் உரிமைகள் அனைத்தும் எவ்வாறு “ ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்குள் உள்ளவாக்கப்படப்போகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஏற்படும் மோதல்களுக்கும் மனிதனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கும் கருவாக அமையும் வெறுப்புப் பேச்சுகளைச் சமூகத்தின் மத்தியிலிருந்து விரட்டுவது எமது அனைவரதும் தலையாய கடமையென்பதை ஒவ்வொரு தனி நபரும் தங்களது மனதில் நிலை நிறுத்த வேண்டும் என்பதுடன் அரசாங்கமும் இன, மத ரீதியிலான வெறுப்புப் பேச்சு என்ற அரசியல் ஆயுதத்தை கைவிட்டு நாட்டு மக்களின் ஜனநாய உரிமைகளை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

( படங்கள் நன்றி இணையம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்

2023-03-21 14:46:01
news-image

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...

2023-03-20 16:58:31
news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52
news-image

நீளும் நீதிக்கோரிக்கை

2023-03-18 14:06:47
news-image

சிக்கல்களை ஏற்படுத்தும் வொஷிங்டன், சீன இசைவு

2023-03-18 13:59:37
news-image

முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூடிக்கதைப்பது கூட சாத்தியமில்லையா?

2023-03-18 13:13:37
news-image

சிறப்புரிமை விவகாரத்தை விவாதிப்பதற்கு தீர்மானம்

2023-03-18 22:33:55