(நா.தனுஜா)

நாட்டில் அமைச்சரவையும் சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரும் இருக்கின்ற சூழ்நிலையில், அவர்களைப் பொருட்படுத்தாமல் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபைத் தயாரிப்பதற்கான புதிய ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.

Articles Tagged Under: இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் | Virakesari.lk

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (29 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்தும் நாளாந்தம் பெருந்தொகைப்பணம் புதிதாக அச்சிடப்படுவது குறித்தும் ஜப்பானின் முன்னணி வர்த்தகப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் - 19 வைரஸ் பரவலைக் காரணமாகக்கூறமுடியாது. ஏனெனில் இந்த வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் தெற்காசியப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் உரிய செயற்திட்டங்கள் மூலம் அவற்றின் பொருளாதாரங்களை சரியாகக் கையாளுகின்றன.

'சுபீட்சமான எதிர்காலத்திற்கான நோக்கு' என்ற செயற்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 10 வருடகாலத்தில் உரம் தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றுகூறிவிட்டு, அதனை வெறுமனே 24 மணிநேரத்திற்குள் செயற்படுத்துவதற்கு முயற்சித்தார்கள்.

அதன் விளைவாக தற்போது நாடளாவிய ரீதியில் விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். புத்திஜீவிகள் மூலம் நாட்டை ஆட்சிசெய்யப்போவதாகக்கூறிய அரசாங்கத்திலிருந்து தற்போது புத்திஜீவிகள் பலரும் விலகிவருகின்றார்கள். சுகாதாரத்துறையைச் சேர்ந்த புத்திஜீவிகளின் ஆலோசனைகளைச் செவிமடுக்காததன் விளைவாக இப்போது சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

அரசாங்கத்தினால் ஐக்கிய மக்கள் சக்திக்கு சேறுபூசும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் நாட்டையும் நாட்டுமக்களையும் நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய இயலுமை ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றது என்பதைத் தற்போது மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆட்சிபீடமேறி இருவருடங்களின் பின்னர் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபைத் தயாரிப்பதற்கென புதிய ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. நாட்டில் அமைச்சரவையும் சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சரும் இருக்கின்ற சூழ்நிலையில், அவர்களைப் பொருட்படுத்தாமல் இந்தப் புதிய செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து நாட்டுமக்களும் சர்வதேச ஊடகங்களும் முக்கிய பிரதிநிதிகளும் எத்தகைய பிரதிபலிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்பதை நாம் அவதானித்துள்ளோம். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வெறுப்படைந்து நாட்டைவிட்டு வெளியேறவேண்டாம் என்று இளைஞர், யுவதிகளிடம் கோரிக்கைவிடுக்கின்றோம். அரசாங்கத்தின் ஏகாதிபத்திய செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒன்றிணையுமாறு அவர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம். நாட்டை விட்டு வெளியேறுவது ஒருபோதும் தீர்வைப்பெற்றுத்தராது. மாறாக நாட்டில் இருந்துகெண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டு மக்களை முன்னிறுத்திய ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.