(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மகவெவ

 

மகவெவ பொலிஸ் பிரிவில் மாத்தளை - குருணாகல் வீதியில் குருணாகல் நோக்கி சென்று கொண்டிருந்த பேரூந்தொன்று வீதியை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தின்போது பேரூந்தில் 35 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 14 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் , 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். விபத்து தொடர்பில் பேரூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மஹவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.                                                                    

பத்தேகம

 

பத்தேகம பொலிஸ் பிரிவில் ஹிக்கடுவை - பத்தேகம வீதியில் வவுலகல பிரதேசத்தில் பத்தேகம நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த முச்சகரவண்டி சாரதி கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 69 வயதுடைய பாலகலந்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் புதுக்குடியிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டையிழந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் வண்டியின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற 21 வயதுடைய நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.