(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாக டப்ளியூ. திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் சி.ஐ.டி. பிரதானியாக (சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர்) நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதுவரை சி.ஐ.டி.யின் பிரதானியாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டே பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன அந்த பதவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2019 நவம்பர் மாதம் ஆட்சி மாற்றத்தின் பின்னர், சி.ஐ.டி.யின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகரவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, டப்ளியூ. திலகரத்ன பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்பதவியில் அவர் 2019 நவம்பர் 23 முதல் 2020 மே நடுப்பகுதி வரை கடமைகளை முன்னெடுத்திருந்தார்.

அதன் பின்னரேயே பிரதிப் பொலிஸ் மா அதிபராக அவர் தரமுயர்த்தப்பட்டு மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையிலேயே தற்போது மீள அவர், சி.ஐ.டி.யின் கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

டப்ளியூ. திலகரத்னவின் இந்த இடமாற்றத்தை அடுத்து வெற்றிடமான மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே. வதசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.  

பிரசாத் ரணசிங்கவுக்கு முன்னர் சி.ஐ.டி. பிரதானியாக வெதசிங்கவே கடமையாற்றியிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.