ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர்களையும் உள்வாங்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தாவும் செந்தில் தொண்டமானும் இணைந்து எடுத்துரைத்துள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான 13 பேர் கொண்ட ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான 11 பங்காளி கட்சியின் தலைவர்களுக்கும் உறுப்பினர்கள்,ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான விசேட அவசர சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பிரதமரின் மதவிவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் இ.தொ.கா.வின் உப தலைவருமான செந்தில் தொண்டமானும் இணைந்து ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் தழிழர்களையும் குறித்த செயலணியில் இணைக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோளை முன்வைத்தனர்.

இந்நிலையில், வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த செயலணியை விரிவுபடுத்துவதாகவும் அதில் தமிழர்களை இணைத்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாக பிரதமரின் மதவிவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் இ.தொ.கா.வின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வீரகேசரிக்கு தெரிவித்தார்.