(நா.தனுஜா)

நாட்டின் பயிர்ச்செய்கையை அழிக்கும் நோக்கில் இயங்கிவரும் பல்தேசியக்கம்பனிகளின் கைப்பாவையாக அரசாங்கம் மாறியிருக்கின்றது. பயிர்ச்செய்கையை முற்றாக அழிக்கும் வகையிலான பல்தேசியக்கம்பனிகளின் சதித்திட்டத்தையே அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பில் எமது நாட்டின் பரிசோதனை மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் தவறென்றும் அந்த உரத்தை இலங்கை மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அழுத்தம் பிரயோகிப்பதற்குப் பிறிதொரு நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு என்ன உரிமை இருக்கின்றது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஹசலக்க பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில், வேறெந்த அரசாங்கங்களும் விவசாயிகளுக்கு இவ்வாறான மிகமோசமான பேரழிவை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் நாட்டின் பயிர்ச்செய்கையை அழிக்கும் நோக்கில் இயங்கிவரும் பல்தேசியக்கம்பனிகளின் கைப்பாவையாக அரசாங்கம் மாறியிருக்கின்றது. அத்தகைய பல்தேசியக்கம்பனிகளின் பிரதான முகவராகமாறி, நாட்டின் பயிர்ச்செய்கையை அழிக்கும் வகையிலான அவற்றின் மிகமோசமான சதித்திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்திவருகின்றது. அதன் முதற்கட்டமாக பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரம் மற்றும் கிருமிநாசினி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் விவசாயிகளின் அனைத்துத் தேவைப்பாடுகளும் பூர்த்திசெய்யப்படும் அதேவேளை, அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை உள்ளடக்கிய விசேட கொள்கைப்பிரகடனமொன்று தயாரிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்படும்.

அதுமாத்திரமன்றி விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான பொருட்களைப் பெற்றுக்கொடுப்பது அவர்களுக்குரிய அடிப்படை உரிமையாக மாற்றியமைக்கப்படும். விவசாயிகளின் உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதற்கெதிராக அவர்கள் உயர்நீதிமன்றத்திற்குச்சென்று போராடக்கூடிய அளவிற்கு அரசியலமைப்பின் ஊடாக அவர்களது உரிமைகள் வலுப்படுத்தப்படும்.

தற்போது எமது நாட்டின் மீதான உரித்தை வெளிநாட்டுக் கம்பனிகள் தம்வசப்படுத்திக்கொண்டிருக்கின்றன. தீங்கேற்படுத்தும் கூறுகள் அடங்கிய சீனாவின் உரம் ஏற்றப்பட்ட கப்பல் திருப்பியனுப்பப்பட்டது. இருப்பினும் தற்போது அக்கப்பல் மீண்டும் எமது நாட்டிற்குள் உள்நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.

அதில் ஏற்றப்பட்ட உரம் தொடர்பில் எமது நாட்டின் பரிசோதனை மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் தவறென்றும் அந்த உரத்தை மீண்டும் எமது நாடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அழுத்தம் பிரயோகிப்பதற்குப் பிறிதொரு நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு என்ன உரிமை இருக்கின்றது? எனவே தீங்கு விளைவிக்கும் கூறுகள் அடங்கியுள்ள உரம் எமது நாட்டு மண்ணில் தரையிறக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டார்.