(எம்.மனோசித்ரா)

நாட்டில் பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் 3 வயது குழந்தை உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

காத்தான்குடி

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த காரொன்று, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றில் மோதியுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 20 வயதுடைய காத்தான்குடி - 2 பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். 

விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புத்தல

புத்தல பொலிஸ் பிரிவில், புத்தள - படல்கும்புர வீதியில் ரஜகண்டி சந்தியில் படல்கும்புர நோக்கி சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனமொன்று முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மற்றும் கெப் ரக வாகன சாரதி ஆகியோர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறிகல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய படல்கும்புர வீதி, புத்தள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். புத்தள பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்கிரிய

இங்கிரிய பொலிஸ் பிரிவில், இங்கிரிய - பாதுக்க வீதியில் அரகாவில பிரதேசத்தில் இங்கிரியவிலிருந்து பாதுக்க நோக்கி சென்று கொண்டிருந்த காரொன்று வீதியில் சென்று கொண்டிருந்த பாதசாரியொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய பாதசாரி இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

திக்வெல்ல

திக்வெல்ல பொலிஸ் பிரிவில் பதீகம - ரத்மலே குறுக்கு வீதியில் தலஹிட்டியாகொட பாடசாலைக்கருகில் திக்வெல்ல நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறியொன்றும், இரத்மலானை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவரும், குழந்தையொன்றும் படுகாயமடைந்த நிலையில் பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 3 வருடமும் 6 மாதமும் வயதுடைய தலஹிட்டியாகொட, இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை உயிரிழந்துள்ளது. 

விபத்து தொடர்பில் சிறிய ரக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கோட்டவில

கோட்டவில பொலிஸ் பிரிவில் காலி - கொழும்பு வீதியில் பண்ரமுல்ல பிரதேசத்தில் சாலை கடந்த பாதசாரியொருவரை அடையாளம் காணப்படாத வாகனமொன்று மோதி தப்பிச் சென்றுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ள குறித்த நபர் அடையாளம் காணப்படாத 42 வயது மதிக்கத்தக்கவராவார். 

விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக கோட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.