(எம்.எம்.சில்வெஸ்டர்)

சி‍ரேஷ்ட மெய்வல்லுநர்கள் பங்கேற்கும் 99ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் பாகம் எதிர்வரும் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி கடந்த மே மாதம் நடைபெற்றிருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பின் காரணமாக இதனை முழுமையாக நடத்த முடியாமல் போனதால், 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்திருந்தது. 

30 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் முதலாவது நாளன்று ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப்போட்டி, 800 மீற்றர் ஓட்டப் போட்டி, 5000 மீற்றர் ஓட்டப் போட்டி, கோலூன்றிப் பாய்தல், தட்டெறிதல், முப்பாய்ச்சல் ஆகியனவும் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி, 1500 மீற்றர் ஓட்டப் போட்டி, 10,000 மீற்றர் ஓட்டப் போட்டி, முப்பாய்ச்சல், சம்மட்டி எறிதல் ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாளான 31 ஆம் திகதியன்று, ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டி, 1500 மீற்றர் ஓட்டப் போட்டி, 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டி, 3000 மீற்றர் தடைத்தாண்டல் போட்டி, உயரம் பாய்தல், குண்டெறிதல், பத்து அம்ச போட்டிகள் என்பனவும் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டி, 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டி,  நீளம் பாய்தல், கோளூன்றிப் பாய்தல், குண்டெறிதல், உயரம் பாய்தல் மற்றும் ஏழு அம்ச போட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் ‍வெற்றியீட்டியவர்களும் எதிர்காலத்தில் அடைவு மட்டங்களை எட்டக்கூடிய வீர, வீராங்கனைகளை மாத்திரமே இப்போட்டியில் பங்கேற்கச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.