(எம்.மனோசித்ரா)

முல்லேரியா மற்றும் புளத்கொஹூபிட்டி பொலிஸ் பிரிவுகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் நேற்று புதன்கிழமை முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் ஆகியவற்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியா பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 812 கிராம் கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 22 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புளத்கொஹூபிட்டி பொலிஸ் பிரிவில் புணேல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.