(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

நேற்று இந்த  தீர்மானம்  அறிவிக்கப்படவிருந்த நிலையில், வழக்கு விசாரணை ஆரம்பத்திலேயே, அடுத்த தவணையில் தீர்மானத்தை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  குற்றப் பகிர்வுப் பத்திரம்  மீதான வழக்கு விசாரணை நேற்று  மீளவும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழமையாக ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வந்த போதும், நேற்று ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். நான்கு தவணைகளின் பின்னர் இவ்வாரு ஊடகவியலாளர்கள் இவ்வழக்கை அறிக்கையிட அனுமதிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம்  அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகியோரே இவ்வழக்கின்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள்  நேற்றும் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை.

எனினும்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளின் இந்ரதிஸ்ஸ, பர்மான் காசிம் ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

மெளலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவுடன் சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

வழக்கு பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்ட போது முதலில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, பிரதிவாதி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக வாதங்களை முன் வைத்தார்.

' நியாயமான வழக்கு விசாரணைகளை உறுதி செய்வதற்காக, பிரதிவாதிக்கு தன்பக்க நியாயங்களை முன் வைக்க தேவையான சான்றுகளை வழக்குத் தொடுநர் தரப்பிடமிருந்து நாம் எதிர்ப்பார்க்கிறோம். அவ்வாறு எமக்கு அவசியமான சான்று ஆவணங்களை நாம் பட்டியலிட்டு கையளித்திருந்த நிலையில், அவற்றில் சில கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் பல கிடைக்கவில்லை.

அவற்றை இன்று ( நேற்று 27) பட்டியலிட்டு மன்றுக்கு கையளித்துள்ளதுடன் அதன் பிரதியை வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்புக்கும் கொடுத்துள்ளோம். அதன்படி அவ்வாவணங்களை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கின்றோம்.

அத்துடன்  குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த சான்றுப் பட்டியலில் அடங்கியிருந்த புகைப்படத் தொகுப்பின் பிரதியையும் எமக்கு கையளிக்குமாறு கோருகின்றோம். அதே நேரம், சாட்சி கட்டளை சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் பொருட்களை பரிசீலிக்க  இடம், நேரம், திகதியை எமக்கு தருமாரும் நாம் கோருகின்றோம்.' என தெரிவித்தார்.

 இதனையடுத்து மெளலவி சகீல் கான் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவும், ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவின் வாதங்களை ஆமோதித்ததுடன், அதற்கு மேலதிகமாக சட்ட மா அதிபர் சான்றா வணங்கள் எதையேனும் தர மருத்தால், அது தொடர்பில் மன்றில் வாதங்களை முன் வைத்து உத்தரவொன்றினை பெற எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

இதன்போது, நீதிபதி குமாரி அபேரத்ன, எந்த சான்றுகளை வழங்குவது, எதனை மறுப்பது என இறுதியான நிலைப்பாட்டை சட்ட மா அதிபர் இன்னும் தெரிவிக்காத நிலையில், எதிர்வரும் தவணையில் அதனை உறுதி செய்த பின்னர் அவ்வாறான வாதம் ஒன்று அவசியம் எனில் முன் வைக்கலாம் என அறிவித்தார்.

இதனையடுத்து வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  சுதர்ஷன டி சில்வா,  விடயங்களை மன்றுக்கு தெரிவித்தார்.

' கனம் நீதிபதி அவர்களே, இன்று ( நேற்று 27) பிரதிவாதிகளின் சட்டத்தரனிணிகள் அவசியமான சான்றாவணங்களின் பட்டியல் என ஒரு பட்டியலை கையளித்துள்ளனர். அதில் வழக்கு விசாரணை ஆரம்பிக்க முன்னர் அவசியமான ஆவணங்களையும், வழக்கு விசாரணையிடையே பெற்றுக்கொள்ள முடியுமான ஆவணங்கலையும் அவர்கள் வேறாக கொடுத்துள்ளனர்.

நல்லது. அது தொடர்பில் நான் மன்றில் ஆஜராகியுள்ள விசாரணை அதிகாரிகளின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு சில விடயங்களை தெளிவுபடுத்துகிறேன்.

வழக்கு விசாரணைக்கு முன்னதாக அவர்கள் கோரும் சான்றாவணத்தில் முதலாவது,  தட்டச்சு செய்யப்பட்ட வாக்கு மூலங்களின் கையெழுத்தினாலான மூலப் பிரதியாகும். இதனை வழங்க முடியாது. அது பொலிஸ் சுற்றரிக்கைகளை மீறும் செயல். எனவே அதனை வழங்க முடியாது.

2 ஆவதாக கோரும் விடயத்தையும் வழங்க முடியாது.

3,4 ஆம் சான்றாவணங்கள் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ளது. இவ்வழக்கு சி.சி.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்த விடயமாகும். எனினும் சி.சி.டி. பொறுப்பிலுள்ள அந்த ஆவணங்களை  பெற்றுக்கொடுக்க பரிசீலிக்க முடியும்.

6 ஆவது கோரிக்கையாக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது பொலிஸ் அத்தியட்சர் கையளித்திருக்க வேண்டிய அதிகாரத்தை கையளிக்கும் எழுத்து மூல கடிதம்  கோரப்பட்டுள்ளது. 

இந்த கடிதம் இவ்வழக்குடன் தொடர்புபட்டது அல்ல. முதல் பிரதிவாதி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கான சான்றுகளை சேகரிக்க இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராக்கும் அரச சட்டவாதியை கேட்காமல் என்னால் முடிவெடுக்க முடியாது. 7,8 ஆம் கோரிக்கைகளும் அவ்வாறானதே.

13,15 ஆம்  கோரிக்கைகள் தொடர்பில் மீள பரிசீலித்து குறைப்பாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்ய முடியும். 21,22 ஆம் கோரிக்கைகளும் அடிப்படை உரிமை மீறல் மனுவுடன் தொடர்புபட்டது. எனவே அது சார்ந்த அரச சட்டவாதியுடன் கலந்துரையாட வேண்டும்.30,31,32 ஆம் கோரிக்கைகளும் ஆராய்ந்து பெற்றுத்தர முடியும்.' என குறிப்பிட்டார்.

இதன்போது ஹிஜாஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸ, வெருமனே முடியாது என கூறாமல் ஏன் அவற்றை தர முடியாது என்ற காரணத்தையும் மன்றில், உரிய வகையில் முன் வைக்க வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த  நீதிபதி குமாரி அபேரத்ன, பிரதிவாதிகள் நியாயமான வழக்கு விசாரணைக்காக அவர்களது தரப்பு நியாயங்களை சமப்பிப்பதற்காக கோரும் குறித்த  சான்றாவன பட்டியலில் எவற்றை வழங்க முடியும்  எதனை வழங்க முடியாது என உறுதியாக அடுத்த தவணை மன்றுக்கு அறிவிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனராலுக்கு அறிவித்தார். 

அதன் பின்னர்  ஏதேனும் ஒரு சான்றாவணத்தை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட மன்றின் அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிடுவது தொடர்பில் ஆராய முடியும் என அவர் சுட்டிக்காட்டியதுடன்,  ஹிஜாஸ் உள்ளிட்ட இரு சந்தேக நபர்களுக்கும் பிணையளிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிப்பதாக தெரிவித்து அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அத்துடன் இந்த விவகாரத்தின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 2022 ஜனவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதாகவும் அவர் அறிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ' இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.' என  கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைவிட,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட  சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்தார். அது முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, தண்டனை சட்டக் கோவையின் 102, 113 (ஆ) ஆகிய அத்தியாயங்களின் கீழும்,  1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) ( உ) பிரிவின் கீழும்,  2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின்  3(1) ஆம் உறுப்புரையின் கீழும்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கான நம்பகரமான  தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டியே, அக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை மன்றில்  ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17 ஆலோசனை வழங்கினார்.

அதன்படி இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜாசிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் அவரை குற்றவியல் சட்டக் கோவை நடைமுறைக்கு அமைய நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்த நிலையிலேயே முதன் முறையாக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே சட்ட மா அதிபர் கடந்த பெப்ரவரி 17 வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஹிஜாஸுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அல் சுஹைரியா மத்ரஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே அவ்விருவருக்கும் எதிராக தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.