இன்று களத்தில் இலங்கை - அவுஸ்திரேலியா ! பலம் என்ன ? பலவீனம் என்ன?

Published By: Gayathri

28 Oct, 2021 | 10:55 AM
image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள குழு 1 க்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மற்றொரு வெற்றியை இலக்கு வைத்து இலங்கை விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பு சற்று அதிகரிக்கும் என்பதையும் நினைவில் நிறுத்தி அவுஸ்திரேலியாவின் சவாலை முறியடிக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது.

பங்களாதேஷில் 7 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவை வெற்றிகொண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை, நடப்பு இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றில் நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.

அவுஸ்திரேலியாவையும் நியூஸிலாந்தையும் சில மாதங்களுக்கு முன்னர் தனது சுழல்பந்துவீச்சுக்களின் மூலம்  கதிகலங்கச் செய்து தொடர்களை வென்றெடுத்த பங்களாதேஷை சுப்பர் 12 சுற்றில் மிக இலகுவாக வெற்றிகொண்ட இலங்கை, இன்றைய போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

பங்காளதேஷுடனான வெற்றியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சரித் அசலன்க, அனுபவசாலியான பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் குவித்த அரை சதங்கள் பிரதான பங்காற்றியிருந்தன.

எவ்வாறாயினும் முன்வரிசை துடுப்பாட்டத்தில் நிலவும் குறைபாடு இலங்கை அணிக்கு தொடரும் பிரச்சினையாக உள்ளது.

எனவே குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் அணிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.

இதேவேளை, சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க ஆகிய இருவரும் இலங்கையின் அடுத்த தலைமுறைக்கான அதி சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் என அணியின் தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்தார்.

'இலங்கையில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் நான் அவதானித்து வந்துள்ளேன். 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெறும் சில பநதுவீச்சாளர்களும் இதில் அடங்குகின்றனர். 

அவர்கள் அனைவரும் வெகுவாக முன்னேறி வருகின்றனர். ஆனால், சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க ஆகிய இருவரிடம் உள்ள துடுப்பாட்ட ஆற்றலைப் போன்று வெறு எவரிடமும் நான் காணவில்லை. 

இலங்கையின் எதிர்கால துடுப்பாட்டத்தில் அவர்கள் இருவரும் பிரதான பங்கு வகிக்கவிருப்பதால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கவேண்டும்' என்றார் மிக்கி ஆர்த்தர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன விளையாடக்கூடிய  உடற்தகுதியைக் கொண்டிருப்பார் என நம்புவதாக மிக்கி ஆர்த்தர் குறிப்பிட்டார்.

முதல் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஒரு ஓவர் மாத்திரம் வீசி 2 விக்கெட்களை வீழ்த்திய தீக்ஷன உபாதை காரணமாக அதன் பின்னர் பந்துவீசவில்லை. 

இப்போது அவர் பூரண குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கை அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

பொதுவாக சுழற்பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா பலவீனமாக இருப்பதால் தீக்ஷனவின் வருகை இலங்கை அணிக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமையும்.

எவ்வாறாயினும் இன்று காலை தீக்ஷனவை உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட பயிற்றுநர் ஆர்த்தர், தீக்ஷனவுக்கு விளையாட முடியாமல் போனால் அக்கில தனஞ்சயவை அணியில் சேர்ப்பதாகக் கூறினார்.

இருபதுக்கு 20 உலகக் கிணண கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் சகலதுறைகளிலும் பிரகாசித்துவந்துள்ள இலங்கை இன்றைய போட்டியிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அசலன்க, பெத்தும், ராஜபக்ஷ, ஹசரங்க துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ளதுடன் வேகப்பந்துவீச்சாளர்களான சாமிக்க கருணாரட்ன, லஹிரு குமார, துஷ்மன்த சமீர ஆகியோரும் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர். 

இவர்களைப் போன்று அணித் தலைவர் தசுன் ஷானக்க உட்பட ஏனையவர்களும் பிரகாசித்தால் இலங்கை அணிக்கு அது போனசாக அமையும்.

இது இவ்வாறிருக்க, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலியா இன்றைய போட்டியை இலகுவாக கருதப்போவதில்லை.

அணித் தலைவர் ஆரொன் பின்ச், டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் மார்ஷ், க்ளென் மெக்ஸ்வெல், மெத்யூ வேட் ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

அதேபோன்று பந்துவீச்சில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா ஆகியோர் பிரதான பங்குவகின்றனர்.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் 16 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் இரண்டு அணிகளும் தலா 8 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. 

இருபதுக்கு 20 உலகக் கிண்ண அரங்கில் அவுஸ்திரலியா 3 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

அணிகள்

இலங்கை: குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன் சமீர, மஹீஷ் தீக்ஷன அல்லது அக்கில தனஞ்சய, லஹிரு குமார.

அவுஸ்திரேலியா: ஆரொன் பின்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்யூ வெட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வூட், அடம் ஸம்ப்பா,  - (என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46