அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள், பூமியை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி

By T Yuwaraj

27 Oct, 2021 | 07:23 PM
image

(செய்திப்பிரிவு)

புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரின் தலைவர் அப்துல்லா சாஹீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மனிதன், பூமி மற்றும் சுபீட்சத்துக்கான காலநிலைச் செயற்பாடுகளை விருத்தி செய்தல்' என்ற தலைப்பிலான அரச தலைவர்கள் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், கலந்துகொண்டிருந்தனர்.

காலநிலைக்கு முக்கியத்துவமளிப்பதற்காக நாடுகளுக்குள்ள இயலுமையை கொவிட்-19 தொற்றுப் பரவல் கேள்விக்குள்ளாகியுள்ள நிலைமையில் காணப்படும் அவசரத் தேவையைக் கருத்திற்கொண்டு, 'மனிதன், பூமி  மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதற்கான காலநிலை செயற்பாட்டுத் திட்டம்' என்பதை முன்வைப்பதற்காகவே, இம்முறை கூட்டத்தொடர் தலைவரால் இவ்வுயர்மட்டக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள், இந்தப் பூமியை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டதோடு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களைக்  தணித்தல் மற்றும் அவற்றுக்காக முன்னிலையாதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சிறந்த பலதரப்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு அவசியம் என்று எடுத்துரைத்தார்.

நாம் இன்று வாழ்ந்துகொண்டிருப்பது, மானுட வரலாற்றில் மிகவும் தீர்மானமிக்க காலகட்டத்தில் ஆகும். அதனால், காலநிலை மாற்றங்களுக்கு உடனடியானதும் தீர்மானமிக்கதுமான அவதானத்தைச் செலுத்தித் தீர்வுகளைத் தேடவேண்டும். சர்வதேச ரீதியிலான நிலக்கரியற்ற புதிய சக்தி வலு மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதையிட்டு இலங்கை பெருமையடைகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரகடனத்தின் கீழ், சதுப்பு நிலச் சுற்றாடல் கட்டமைப்பு மற்றும் ஜீவனோபாயம் தொடர்பான செயற்பாட்டுக் குழுவுக்கும் இலங்கை தலைமை வகிக்கின்றது எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

பசுமை நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான கொழும்பு அறிக்கையின் பிரகாரம், நைதரசன் வாயு வெளியீட்டின் அளவை 2030 ஆம் ஆண்டாகும் போது அரைவாசியாகக் குறைப்பதற்கு இலங்கை முயற்சி எடுத்துள்ளது.  இலங்கையின் உள்நாட்டுக் கொள்கையின் வரையறை, மேலாண்மை பற்றி அவதானம் செலுத்தி உள்ளதைத் தான் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதன் மூலம் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், நைதரசன் கழிவுகளை குறைத்துக்கொள்ளவும் முடியும் என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் காபன் அளவை 2050 ஆம் ஆண்டாகும் போது பூச்சியமாக்கிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதோடு, 2030 ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டின் சக்தி வலுத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்கள் மூலம் நிறைவு செய்துகொள்ளும் இலக்கை அடைந்து கொள்வதற்காக இலங்கை பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சிறப்பான நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக, எமது அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காகத் தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி, முதலீடு மற்றும் நிதி நன்கொடை போன்ற துறைகளில் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பைத் தாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது நிலவி வருகின்ற மற்றும் அவசியமான தொழில்நுட்பத் திறன் மற்றும் நிதி இயலுமைகளுக்கிடையில் உள்ள இடைவெளி பற்றி இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதோடு, அந்த இடைவெளியை எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வதென்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right