(நா.தனுஜா)

ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை அடக்குவதற்கும் அவற்றின்மீது அச்சுறுத்தல்களைப் பிரயோகிப்பதற்குமான ஓர் ஆயுதமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதுடன் அதனூடாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகங்கள் இலக்குவைக்கப்படுகின்றன. 

குறிப்பாக கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு கோருவோர் தேசத்துரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் முத்திரைகுத்தப்படுகின்றனர் என்று சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு அவசியமான ஆதரவை வழங்குவதுடன் குறிப்பாக தீவிர கண்காணிப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்தவேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

 

பயங்கரவாதவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகத்தினால் மனித உரமைகளின் சமநிலையில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை (26)  மாலை 7.30 மணிக்கு நிகழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

பயங்கரவாதத்தடைச்சட்டமானது கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதுடன் 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படுகின்றது. 

கைதுசெய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள் வரையில் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கான வாய்ப்பை இப்பயங்கரவாதத் தடைச்சட்டம் வழங்குகின்றது. 

விசாரணைகளின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது நியாயமான சந்தேகத்தை அடிப்படையாகக்கொண்டு மேற்படி கைதுகள் இடம்பெறாத காரணத்தினாலேயே நான் 'தன்னிச்சையான' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றேன். 

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு ஒன்றுக்காகக் கைதுசெய்யப்படும் நபருடன் தொடர்புகளைப் பேணியவர்களும் அச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுகின்றார்கள். 

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினக்குண்டுத்தாக்குதல்களின் பின்னர் அரபுமொழிப்புத்தங்கள் அல்லது அல்லாஹ்வை போற்றும் வகையிலான அரபுமொழிப் பாடல்களை வைத்திருந்தவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைதுகளின்போது உரிய நடைமுறைகள் பெரும்பாலும் மீறப்பட்டு வந்திருக்கின்றன. 

திருகோணமலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தில், கைதுசெய்வதற்காகச் சென்ற அதிகாரிகள் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

அதேபோன்று கைதுசெய்வதற்கான காரணத்தைக் குறித்த நபருக்கு அறிவிக்கவில்லை என்பதுடன் அவரைத் தடுத்துவைத்திருக்கும் இடத்தை அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தவுமில்லை. குறைந்தபட்சம் கைதுசெய்வதற்கான எந்தவொரு சான்றையும் வழங்கவில்லை.

 

இச்சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியாகும் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், கைதுசெய்யப்படும் நபர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

சிறைச்சாலைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 84 சதவீதமான ஆண்கள், கைதின்போது தாம் சித்திவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

அவ்வாறு சித்திரவதைகளுக்கு உள்ளானோரில் 90 சதவீதமானோர், அதன் பின்னரே வாக்குமூலத்தில் தாம் கையெழுத்திட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி அவர்களில் 95 சதவீதமான ஆண்கள், வாக்குமூலம் தமக்குப் புரியாத சிங்களமொழியிலேயே எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

 

அதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டமானது 18 மாதங்கள் வரையில் தடையுத்தரவைப் பிறப்பிப்பதற்கான அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்குகின்றது. 

இத்தடையுத்தரவின் மூலம் குறித்த நபர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் பொதுநிகழ்வுகளில் உரையாற்றுவதையும் நிறுவனமொன்றில் ஆலோசகராக செயற்படுவதையும் தடைசெய்யமுடியும். 

எனவே இவ்வாறான உத்தரவுகள் உரியவாறான நடைமுறைகளோ வெளிப்படைத்தன்மையோ அல்லது பொறுப்புக்கூறலோ இன்றி அமைச்சரினால் சிவில் உரிமைகள் தன்னிச்சையாகக் குறைக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றது.

 

அடுத்ததாக 'மதரீதியான கடும்போக்கு சிந்தனைகள் மற்றும் நடத்தைகளையுடையவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல்' என்ற தலைப்பிலான புதிய வழிகாட்டல்கள் கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டன. 

இவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, பின்னர் பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த வழிகாட்டல்களுக்கு ஒப்பானதாகும். இதனூடாக முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுகின்றது.

 

மேலும் ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை அடக்குவதற்கும் அவற்றின்மீது அச்சுறுத்தல்களைப் பிரயோகிப்பதற்குமான ஓர் ஆயுதமாகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதுடன் அதனூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களும் இலக்குவைக்கப்படுகின்றனர். 

கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு கோருவோர் தேசத்துரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் முத்திரைகுத்தப்படுகின்றனர்.

 

இந்நிலையில் இலங்கை தொடர்பில் உரியவாறு திட்டமிடப்பட்ட அணுகுமுறையொன்றைக் கையாளுமாறு நாம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலாக சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய அமெரிக்காவிடமும் வலியுறுத்துகின்றோம். 

அடுத்ததாக இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு அவசியமான ஆதரவை வழங்குவதுடன் குறிப்பாக தீவிர கண்காணிப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் வடக்கு, கிழக்கு மாகாண செயற்பாட்டாளர்கள் தொடர்பில் விசேடமாக அவதானம் செலுத்தவேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திடம் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.