(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவி சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆகிய பதவிகளுக்கு நிகரான அதிகாரம் தற்போதைய மத்திய வங்கியின்ஆளுநர்அஜித் நிவார்ட் கப்ராலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் அதிகார ரீதியிலான முன்னுரிமை பட்டியலில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் முன்னிலை வகிப்பதுடன் நான்காவாக பிரதம நீதியரசர் பதவியும் காணப்படுகிறது.

ஐந்தாவது இடத்தி ல்(எ)எதிர்க்கட்சி தலைவர், (பி) அமைச்சரவை அமைச்சர்கள், (சி) பீல்ட்மார்ஷல் ஆகிய பதவிகள் காணப்பட்டன. தற்போது புதிதாக மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அதிகாரங்கள் வழங்கப்பட்டு 5 ஆம்இடத்தில் (டி) என்ற நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் பதவி புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கு காணப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டுள்ள முதலாவது மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் பதவி வகிக்கிறார்.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்கள் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கடந்தமாதம் துறந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அதிகார நிலை தரப்படுத்தலில் 6 ஆவது நிலையில் மாகாண ஆளுநர்களும், 7ஆவதாக மாகாண முதலமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும், 8ஆவதாக பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர், குழுக்களின் பிரதி தலைவர்கள், ஆளும்தரப்பின் பிரதம கொறோடா, 9ஆவது நிலையில் தூதுவர்கள், மற்றும் உயர்ஸ்தானிகர்கள், 10ஆவது நிலையில் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்ள், 11 ஆவது நிலையில் சட்டமா அதிபர், 12ஆவது நிலையில் உயர்நீதிமன்றின் நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிபதிகள், 14ஆவது நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளடங்குகிறது.