இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய  சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர்  தனது சாபதி (11 வயது) மற்றும்  சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். 

வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில்,  நேற்று காலை குறித்த இரு பிள்ளைகளும் அவர்களின் தாயால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த தாய் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

போர்டோ சான் பான்கிராசியோ மாவட்டத்தில் உள்ள வெரோனா நகராட்சியின் பெண்கள் காப்பகத்திலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பிரேத பரிசோதனை அதிகாரியின் முதற்கட்ட விசாரணைகளின்படி உயிரிழந்த பெண் பிள்ளைகளான சாபதி மற்றும் சாந்தனி அவர்களின் உடலில் தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என விசாரணைகளின் மூலம் சந்தேகிக்கப்படுகிறது. 

இரண்டு சிறுமிகளின் பிரேத பரிசோதனை, அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த இன்று நடைபெறவுள்ளது. 

குறித்த இரு பெண் பிள்ளைகளின் மரணமும் அந்ந  நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.