(ஆர்.ராம்)
நாடாளவிய ரீதியில்  2 ஆயிரத்து 436 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன   394 பேர் மரணடைந்ததற்கான பதிவுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான  கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின்  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தற்போது இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆட்களின் எண்ணிக்கை எத்தனை?, இவர்களில் எயிட்ஸ் நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை எத்தனை?, கடந்த ஐந்து வருடங்களில் மரணித்த ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு?, இதுவரையில் மரணித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை எத்தனை?, பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட் காலத்தை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை எவ்வளவு? எச்.ஐ.வி.யை கட்டுப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என  புத்திக பதிரண  கேள்வியெழுப்பினார். 

அமைச்சர் ராஜித சேனாராத்ன  மேலும் தெரிவிக்கையில், 

நாடாளவிய ரீதியில்  631 பேர் எயிட்ஸ் நோயாளர்களென அடையாளங் காணப்பட்டுள்ளனர். 

இதுவரையில் 394 பேர் மரணித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் 32 பேரும், 2013 இல் 30 பேரும், 2013 இல் 27 பேரும், 2014 இல் 26 பேரும் 2015 இல் 31 பேரும் எயிட்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆட்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்கச்செய்வதற்கு மருத்துவ மட்டத்தில் அரசாங்கம்  பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எச்.ஐ.வி. பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பல்கலைக்கழகத்துக்கு  மாணவர்கள் சேர்க்கப்படும்போதும்  அரச சேவைக்கு ஊழியர்களை  இணைத்துக்கொள்ளும்போதும் எச்.ஐ.வி. சோதனை நடத்துவதற்கு  உத்தேசிக்கப்பட்டுள்ளளது. இதேபோன்று தான் சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகள், கர்ப்பணிப்பெண்கள் ஆகியோரையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

விழிப்புணர்வு அற்ற  செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும்  தெற்காசிய வலயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என்றார்.