வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு புதிதாக 253 மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்தில் நீண்ட காலமாக மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவி வந்தது. குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் மிக மோசமான பற்றாக்குறை காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாடு முழுவதும் ஒரு தொகுதி மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நியமனத்தில் வடமாகாணத்திற்கு 253 மருத்துவ உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 62 மருத்துவ உத்தியோகத்தர்களும், வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு 191 மருத்துவ உத்தியோகத்தர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு 57 பேரும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 28 பேரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 24 பேரும், மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 35 பேரும், வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 47 பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.