கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை கெரவலப்பிட்டியில் அமைக்க நடவடிக்கை

By Gayathri

26 Oct, 2021 | 08:34 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தற்போது பொருட்கள் அடங்கிய கொள்கலன்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஒருகொடவத்த மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறைக்குச் சொந்தமான 03 வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதிகள் மற்றும் ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளால் அப்பணிகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள் மற்றும் வருகை தரும் சேவை பெறுநர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  

அதேபோல் குறித்த வளாகங்களுக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும்போது கொழும்புப் பிரதேசத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. 

குறித்த நிலைமையைக் கருத்திற்கொண்டு புளூமென்டல், பேலியகொடை மற்றும் கெரவலப்பிட்டி போன்ற மாற்று இடங்களில் மிகவும் பொருத்தமான இடத்தை அடையாளங் காண்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியின் கீழ் சாத்தியவள ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய மிகவும் பொருத்தமான இடமாக கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை இடமாறலுக்கு அண்மையில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 19 ஏக்கர்கள் மற்றும் 9.26 பேர்ச்சர்ஸ் காணியில் முன்மொழியப்பட்டுள்ள பரிசோதனை நிலையத்தை அமைத்தல் மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த காணியை அப்பணிக்காக ஒதுக்குவதற்கும், கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right