தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு மிகவும் தீர்க்கமான போட்டி ! வெல்லப்போவது யார் ?

By Digital Desk 2

26 Oct, 2021 | 01:23 PM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சுப்பர் 12 சுற்றுக்கான குழு 1 இல் இடம்பெறும் தென்னாபிரிக்காவும் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளும் தத்தமது முதலாவது வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கில் துபாய் விளையாட்டரங்கில் ஒன்றையொன்று இன்று பிற்பகல் (3.30 மணி) எதிர்த்தாடவுள்ளன.

தத்தமது ஆரம்பப் போட்டிகளில் முறையே அவுஸ்திரேலியாவிடமும் இங்கிலாந்திடமும் தோல்விகளைத் தழுவிய இந்த இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி கிட்டத்தட்ட ஒரு 'நொக் அவுட்' போட்டி போல் அமையவுள்ளது.

தங்களது முதல் போட்டிகளில் எதிரணிகளின் திறமையான பந்துவீச்சுகளை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் துடுப்பாட்டத்தில் சோடைபோன இந்த இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட தென் ஆபிரிக்கா, பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டு போட்டியை கடைசி ஓவர்வரை கொண்டு சென்று பலத்த சவால் விடுத்து 5 விக்கெட்களால் தோல்வி அடைந்திருந்தது.

ஆனால், நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளோ கிரிக்கெட்டில் மழலைகள்போன்று இங்கிலாந்தின் பந்துவீச்சுகளை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களைத் தாரைவார்த்து 55 ஓட்டங்களுக்கு சுருண்டு 6 விக்கெட்களால் தோல்வியைத் தழுவியது.

இதில் கிறிஸ் கேல் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையாக 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியிலும் சுப்பர் 10 சுற்றில் கடைசிக் கட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள், அதன் பின்னர் இந்தியா, இங்கிலாந்து அணிகளை வெற்றிகொண்டு சம்பயினாகியிருந்தது. அதேபோன்று இம்முறையும் மேற்கிந்தியத் தீவுகள் மீண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

க்ரெனேடாவில் இந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது கடும் போட்டிக்கு மத்தியில் 3 - 2 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணி என கருதப்படுகின்றது.

அந்தத் தொடரிலும் ஐபிஎல்லிலும் அபாராமாகத் துடுப்பெடுத்தாடிய குவின்டன் டி கொக் கடைசியாக நடைபெற்ற சில போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியமை தென் ஆபிரிக்காவுக்கு தலையிடியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

எனினும் அதிரடிக்குப் பெயர் பெற்ற விரர்கள், அதிவேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சிறந்த சுழல்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறுவதால் இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்கா சாதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

மறுபுறத்தில் இதே தன்மையுடனான வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் இடம்பெறுவதை மறந்துவிடலாகாது.

ஒட்டுமொத்தத்தில் இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாகத் தென்படுவதால் இன்றைய போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச இருபது 20 அரங்கில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 15 சந்தர்ப்பங்களில் தென் ஆபிரிக்கா 9 தடவைகளும் மேற்கிந்தியத் தீவுகள் 6 தடவைகளும் வெற்றிபெற்றுள்ளன.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் தென் ஆபிரிக்கா 2 - 1 என முன்னிலை வகிக்கின்றது.

அணிகள்

தென் அபிரிக்கா: குவின்டன் டி கொக், டெம்பா பவுமா (தலைவர்), ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் க்ளாசென், ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ், கெகிசோ ரபாடா, கேஷவ் மஹாராஜா, அன்ரிச் நோக்யா, தப்ரெய்ஸ் ஷம்சி.

மேற்கிந்தியத் தீவுகள்: எவின் லூயிஸ், லெண்ட்ல் சிமன்ஸ், கிறிஸ் கேல், நிக்கலஸ் பூரண், ஷிம்ரன் ஹெட்மியர், கீரன் பொலார்ட் (தலைவர்), அண்ட்ரே ரசல், ட்வேன் ப்ராவோ, ஹேடன் வோல்ஷ் ஜூனியர், ஒபெட் மெக்கோய், ரவி ராம்போல் - (என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right