ஸ்கொட்லாந்துக்கு எதிராக ஷார்ஜாவில் திங்கட்கிழமை (25) இரவு நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண 2ஆம் குழுவுக்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 130 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.


சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பி குழுவுக்கான முதல் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ஸ்கொட்லாந்து இன்றைய போட்டியிலும் அசத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், சகல துறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த ஆப்கானிஸ்தானின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களைக் குவித்தது.


முன்வரிசை விரர்கள் அனைவரும் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவு செய்தது.


ஆரம்ப வீரர்களான ஹஸ்ரத்துல்லா ஸஸாய், மொஹம்மத் ஷாஸாத் ஆகிய இருவரும் 35 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷாஸாத் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 28 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஸஸாய் ஆட்டமிழந்தார். ஸஸாய் 30 பந்துகளில் 3 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.


3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான் ஆகிய இருவரும் 52 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானை மேலும் பலப்படுத்தினர்.
குர்பாஸ் 37 பந்துகளில் 4 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றியுடன் 46 ஒட்டங்களையும் ஸத்ரான் 34 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் குவித்தனர். அணித் தலைவர் மொஹம்மத் நபி 4 பந்துகளில் 11 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் சபியான் ஷெரிப் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
191 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 10.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.


ஆரம்ப வீரர் ஜோர்ஜ் மன்சே அதிரடியாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 18 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 25 ஓட்டங்களைக் குவித்தார்.
20 பந்துகளில் மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் கய்ல் கோர்ட்ஸர் 10 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மூவர் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றதுடன் ஜோர்ஜ் மன்சே 5ஆவதாக ஆட்டமிழந்து வெளியேறினார். மத்திய வரிசையில் கிறிஸ் க்றீவ்ஸ் 12 ஓட்டங்களைப் பெற்றார்.
பினவரிசை துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்க எண்ணிக்கைளையே பெற்றனர்.


ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் உர் றஹ்மான் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ராஷித் கான் 2.2 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முஜீப் உர் றஹ்மான் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.