(எம்.மனோசித்ரா)

உர மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி நாட்டின் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பலாந்தோட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (25 ) கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேசபக்தி, தேசிய அடையாளம் போன்ற அனைத்தும் டொலர்களுக்கு முன்னால் சிதறுண்டு போயுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் அரசாங்கம் மண்டியிட்டுள்ளது.

இன்று மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் அரசாங்கமே உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது.

நாட்டின் அப்பாவி விவசாயிகள் தரமான உரத்தையே கோருகின்றனர். உர மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி இந் நாட்டின் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கும் என்றார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரிசிங்க காமினி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் முன்னால் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராய்ச்சி,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தென்னகோன் நிலமே மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.