நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் 2023  இல் ரணில் தீர்வு வழங்குவார் -  வஜிர அபேவர்தன

By T Yuwaraj

25 Oct, 2021 | 08:56 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் தற்போது பூதாகரமாக காணப்படும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின்  ஊடாக  தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் - வஜிர  அபேவர்தன | Virakesari.lk

தற்போதைய அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளின் காரணமாக நாடு தற்போது பேராபத்துக்கு தள்ளப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன, அடுத்தாண்டின் போது இந்த நிலைமை மேலும் மோசமாக மாறும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) கரந்தெனிய தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. இன் கட்சி செயற்பாட்டாளர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு முன்பதாக ஐ.தே.க.வின் தவிசாளர் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியிருந்தார். இதன்போது அவர் கூறுகையில்,

“உரப்பிரச்சினையால் ஒன்றரை வருட காலமாகவே நாட்டில் விவசாயிகள் பலத்த சவால்களுக்க முகங்கொடுத்து வருவதுடன், அழுத்தத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயத் துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. நெற் பயிர்ச் செய்கை மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மரக்கறி பயிர்ச்செய்கையும் பாதிப்படைந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த விவசாயத்துறையும் இந்த அரசாங்கம் அழிவடையச் செய்துள்ளது.

உரம் இல்லாததனால், தற்போது நிலவும் இந்த பாதிப்பை திரும்பவும் மாற்றியமைப்பது மிகவும் கடினமாகும். மீண்டும் மாற்றியமைப்பதாயின், அது இலகுவான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் என்ன கூற முனைந்தாலும், இந்நிலைமை ஏற்படுவதற்கு பிரதான காரணம் நாட்டில்  டொலர் பற்றாக்குறையே ஆகும். இதன் காரணமாகவே நாடு இந்த பேராபத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் இரசாயன உரம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை கொண்டு வருதல் மற்றும் அதன் தரத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். அப்படி தேடிப்பார்க்காவிட்டால் உலகின் எங்கோ ஒரு மூலையிலுள்ள நாட்டிலிருந்து காலவதியான உரம் அல்லது தரக் குறைவான உரம் நாட்டுக்குள் கொண்டு வரப்படுமானால், அது தவறாகும். 

இவ்வாறு உரம் கொண்டுவரப்படுமானால், அவை துறைமுகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் அதன் மாதிரியை துறைமுகத்திற்குள்ளேயே பரிசோதிக்கப்பட்டு அறிக்கை பெறவேண்டும்.  குறித்த அறிக்கை வந்ததன் பின்னரே அதனை இறக்க வேண்டும். இது எமது நாட்டில் மாத்திரமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறேமேற்கொண்டு வருகின்றனர்.

வெளி நாடொன்றிலிருந்து உரம் கொண்டு வரப்படும்பொழுது, அது தொடர்பாக காணப்படும் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல், சட்டத்தை மீறி அல்லது சட்ட திட்டங்களை கவனிக்காது செயற்பட முடியாது.

மேலும், உரப் பற்றாக்குறை நிலவுவதால் தேயிலை உற்பத்தி, கருவா உற்த்தி ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகள் பாதிக்கப்படுவதாலும் நாட்டுக்கு கிடைக்கக்கூடிய டொலர் எண்ணிக்கை குறைவடையும். இதனாலும் நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதேவேளை,  நெல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல் உற்பத்தி பாதிக்கப்படும்போது, வெளிநாடுகளிலிருந்து அரிசி வகைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிகப்படியான டொலர் தேவை செலவிடப்படுகிறது.

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாட்டை கொண்டு செல்வதற்கு நேர்த்தியான கொள்கை மற்றும் நோக்கம் கிடையாது. ஆகவே, இவ்வாறான நிலைமைகளை சரிசெய்து கட்டியெழுப்பப்படுவதற்காக ஐக்கி தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய பொருளாதார திட்டமொன்றை அரசாங்கத்திடம் முன்வைத்தார். அதுபோலவே, சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் எவ்வாறு செயற்படுவது தொடர்பிலும் அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முகங்கொடுத்து வரும் இந்த பேராபத்தை கருத்திற்கொண்டு, அரச துறையும் தனியார் துறையும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். 2015 இல் இந்நாடு மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.

இதனால், அப்போது நிலவிய பொருளாதா பூதாகாரப் பிரச்சினையால் தங்களது ஆட்சிக் காலத்தை 2 ஆண்டு காலம் எஞ்சியிருந்த நிலையில், திடீர் தேர்தலை நடத்த அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாததன் காரணமாகவே அவர்கள் அவ்வாறு செய்திருந்தனர்.

நாட்டினுள் பொருளாதாரம் மற்றும் சமூக உள்ளிட்ட பாரிய பிரச்சினைகள் காணப்பட்டு வந்தவொரு சந்தர்ப்பத்திலேயே 2015 இல் ரணில் விக்கிரமசிங் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

அவர் பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களுக்குள் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகளை குறைத்தார். அது மாத்திரமல்ல, அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்கச் செய்தார். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஓய்வுபெற்றவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்தார்.

ஆனால், இன்று ஆசிரியர்கள் வீதிக்கு தள்ப்பட்டுள்ளனர்.  ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். 13 ஆயிரம் ரூபாவாக இருந்த ஆசிரியர்களது சம்பளத்தை 28 ஆயிரம்  ரூபாவாக உயர்த்தினார். 35 ஆயிரம் ரூபாவாக இருந்த அதிபர்களது சம்பளத்தை 76 ஆயிரம் ரூபாவாக உயர்த்தினார்.

ஆகவே, நாட்டில் நிலவுகின்ற உரப் பிரச்சினைக்கு மாத்திரமல்ல அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நாட்டை கட்டியெழுப்புவதே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள ஐ.தே.க. அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ஆசிரியர் சங்கங்கள் என்னுடன் கலந்துரையாடியிருந்தன. அவர்களுடைய பிரச்சினை நியாயமானதாகும். அந்த பிரிச்சினைகளுக்கு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைக்கும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right