(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் நடுத்தர குடும்பங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரண பொதி வழங்கப்படும்.

வாழ்க்கை செலவு சுமைகளில் இருந்து மக்களை மீட்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஆளும்கட்சி தலைவர் கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பின் காரணமாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

ஆகவே குறைந்த வருமானம் பெரும் நடுத்தர குடும்பங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நிவாரண பொதி வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கான சிறந்த திட்டங்கள் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்படும் வாழ்க்கை செலவுகளை அடிப்படையாகக்கொண்டு சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

கெரவலப்பிட்டிய மின்நிலையம் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேசவில்லை. ஏனெனில் அவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இல்லை.

அரசாங்கத்தை வீழத்தும் நோக்கம் பங்காளி கட்சியினர்களுக்கு கிடையாது. தவறுகளை திருத்திக்கொண்டு சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச்செல்ல முயற்சிக்கிறோம்.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவ்விடயம் தொடர்பில் மக்கள் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றார்.