குமார் சுகுணா

 

எந்த பின்புலமும் இல்லாமல்  சாமானிய மனிதனால் எந்த துறையிலும்  வெற்றிப்பெறலாம்  என்ற பயணத்தின் சரித்திர மகுடமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  தற்போது வழங்கப்பட்டுள்ள இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான   தாதா சாஹேப் பால்கே விருது.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். 

படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவரை கெளரவிக்கும் வகையில் இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகின்றது.

தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

இந்திய திரைத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும்  தேசிய விருதுகள் வழங்கப்படும் போது இந்த விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (1996), இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்(2010) ஆகிய 2 பேருக்கு மட்டுமே இது வரை கிடைத்துள்ளது.

இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு  அறிவித்தது.

 நடிகர் ரஜினிகாந்தின் கலைச்சேவையை கெளரவிக்கும் வகையில் ஏற்கனவே பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அவருக்கு வழங்கப்பட வுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா  இன்று டில்லியில் நடைபெற்றது.

 நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல  2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன. வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றது. அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்ற அவர், இரண்டாவது முறையாக தற்போது இந்த விருதை பெற்றுள்ளார்.

இதேபோல  சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா எனும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த, விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுள்ளது. இமான் சிறந்த பாடல் இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார். அப்பா-மகள் உறவின் உன்னதத்தை பேசும் வகையில் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.. பார்த்திபனின் ஒத்த செருப்புக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.