(எம்.மனோசித்ரா)

இந்தியாவுடன் மிகவும் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ நைட்ரஜன் உரத்தின் தரம் தொடர்பிலும் தற்போது விவசாயத்துறை நிபுணர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது உரிய பரிசோதனைகளை முன்னெடுத்து நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் இடம்பெறும் வழமையான சந்திப்புக்களில் ஒன்றாகும். இதற்கும் சீன உர கப்பலுக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என்றும் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (25 )  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரிசி, பருப்பின் விலையை பார்த்துக் கொள்வதற்காகவா நான் இருக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக இல்லையெனில் எதற்காக அவர் இருக்கிறார் ? 

உண்மையில் தற்போது அரசாங்கமும் இல்லை. ஜனாதிபதியும் இல்லை. வர்த்தக மாபியாக்களே நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன.

அதற்கு சிறந்த உதாரணம் திரும்பிச் சென்ற சீன உர கப்பல் இரண்டாவது முறையாக மீண்டும் நாட்டுக்குள் வருகை தந்துள்ளமையாகும். 

குறித்த இரசாயன உர தயாரிப்பு சீன நிறுவனத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும், நிறுவனங்களும் அந்தளவிற்கு சக்தி வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. 

எனவே குறித்த கப்பல் தொடர்பில் போலியான ஆவணங்களைத் தயாரித்து சட்ட விரோதமாக துறைமுகத்திற்குள் நுழைந்து ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது எமக்கு தெரியாது.

இவ்வாறான நிலையிலேயே இந்தியாவுடன் மிகவும் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்து திரவ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

எனினும் இதன் தரம் தொடர்பிலும் தற்போது விவசாயத்துறை நிபுணர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது உரிய பரிசோதனைகளை முன்னெடுத்து நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அந்நிய செலாவணி இருப்பு மறை பெறுமானத்திற்கு சென்றுள்ளது.

மாலைதீவினை விடவும் கீழ் மட்டத்திற்கு இலங்கை சென்றுள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.