(ஏ.என்.ஐ)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரீநகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 

2019 ஆம் ஆண்டில் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் பகுதிகளுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான விடயங்கள் குறித்து ஆராய்ந்தார். 

மேலும் மக்வால் எல்லையில் ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து கலந்துரையாடினார்.

அது மாத்திரமன்ற உள்ளூர் மக்கள், பாதுகாப்பு படையினர், காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர், குஜ்ஜார் - பகர்வால் சமூகம், பஹாடி சமூகம் மற்றும் ஜம்மு - காஷ்மீரின் வர்த்தக சமூகத்தினர் என பலரையும் சந்தித்து கலந்துரையாடினர். 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அண்மையில் பொதுமக்கள் கொல்லப்பட்ட பல சம்பவங்களுக்கு மத்தியில் இவரது வருகையானது மக்களின் அச்சத்தை போக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

ரீநகரில் பயங்கரவாத தாக்குதலில் இறந்த தீபக் சந்த் என்ற இளம் ஆசிரியரின் குடும்பத்தை அமித் ஷா  சந்தித்து கவலையை தெரிவித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு பணித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் ஜம்மு காஷ்மீர் இருப்பதாகக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகவும், இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதியளித்துள்ளார்.