(எம்.மனோசித்ரா)

நாட்டில் பெருமளவானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமையால் , சமூகத்தில் விரைவாக தொற்றை காவக்கூடியோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்து வருகின்றமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 700 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதே வேளை 200 - 250 தொற்றாளர்கள் ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்பட்டனர். ஆனால் இன்று சுமார் 30 கொவிட் தொற்றாளர்களே காணப்படுகின்றனர்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் 7 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொவிட் அபாயம் கடந்த மாதங்களைவிட சாதகமான முறையில் குறைவடைந்துள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கொவிட் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மக்கள் அதிகளவில் ஒன்று கூடக் கூடிய திருமண நிகழ்வுகள் , மரண சடங்குகள் , ஆலய உற்சவங்கள் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் அதிகளவானோருக்கு தொற்றை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

எனவே இவ்வாறான விடயங்களில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

பொது போக்குவரத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதில் சிக்கல் காணப்படுகிறது. எனவே காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளில் பயணிப்பதை தவிர்த்து , ஜன்னல்களை திறந்து செல்லக் கூடிய பேரூந்துகளில் பயணிப்பது பொறுத்தமானது.

அதேபோன்று மது விற்பனை நிலையங்கள் , திரையரங்குகளிலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு;க் கொள்கின்றோம்.

சுற்றுலா செல்வதாயின் ஒரு கிராமத்திலுள்ள அனைவரும் இணைந்து பேரூந்துகளில் செல்வதைத் தவிரித்து , தனி வாகனங்களில் பாதுகாப்பாக செல்வது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாது என்பது எனது தனிப்பட்ட நிலைப்படாகும்.

தற்போது பெருமளவானோர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளமையால் தொற்றுக்கு உள்ளாகக் கூடியோர் எண்ணிக்கை சமூகத்தில் குறைவடைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள நிலைமையை தொடர்ந்தும் பேணுவதற்கு சகலரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.