(இராஜதுரை ஹஷான்)

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்-அதிபர்கள் சம்பள அதிகரிப்பிற்காக போராடுவதில் தவறென்ன உள்ளது. தொழிற்சங்க நடடிக்கைகளுடன் பாடசாலைக்கு சமுகமளித்து சட்டப்படி கடமையில் ஈடுபடுகிறோம்.

ஆசிரியர்-அதிபர் சேவையில் 24 வருடகாலமாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. 

பாடசாலைகளை தொடர்ந்து திறப்பதா? அல்லது தொடர்ந்து மூடுவதா? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என ஆசிரியர் - அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்  - அதிபர் தொழிற்சங்கத்தினர் சம்பள பிரச்சினை கோரிக்கையை முன்வைத்து இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் வீதிக்கிறங்கி போராடுவதன் பொறுப்பை அரசாங்கமும், கல்வி சேவை அதிகாரிகளும் ஏற்க வேண்டும். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்காமல் பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்கவேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

அரசாங்கம் பலவந்தமான முறையில் பாடசாலைகளை திறந்தது. கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் போராட்டத்தில் ஈடுப்படும் தொழிற்சங்கத்தினரும் ,மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கவில்லை. 

எமது போராட்டம் 98 சதவீதம் வெற்றிப்பெற்றுள்ளது. அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய ஆசிரியர்கள் கடமைக்கு சமுகமளிக்கவில்லை.

தொழிற்சங்கத்தினரது ஆலோசனைகளுக்கும், மாணவர்களின் நலனையும் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு சமுகமளித்துள்ளோம்.

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. நிதியமைச்சர், ஜனாதிபதி ஆகியோர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட அனுமதி வழங்கவில்லை.

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளினால் அனைத்து சேவை துறையினரும் வீதிக்கிறங்கியுள்ளார்கள். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுபோதினி குழு அறிக்கையின் பிரகாரம் ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகளுக்கு வரவு-செலவுத் திட்டத்திற்கு அமைய தீர்வுப் பெற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி செயற்பாடுகளில் மாத்திரம் ஈடுப்படுவோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுப்படுவோம். தொழிற்சங்க போராட்டத்தை கைவிடவில்லை. தொழிற்சங்க போராட்டத்துடன் சட்டப்படி சேவையில் ஈடுப்பட்டுள்ளோம்.

பொருளாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. போராட்டத்தின் ஊடாக தீர்வை பெற்றுக்கொள்வோம் என்றார்.