இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வாகப்போவதில்லை - திஸ்ஸ விதாரண

By T. Saranya

26 Oct, 2021 | 09:07 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்தியாவின் நனொ நைட்ரிஜன் திரவ உரத்தைவிட பல மடங்கு தரம்மிக்க உரத்தை எமது நாட்டில் உற்பத்திசெய்ய முடியும். அத்துடன் நாட்டின் தற்போதுள்ள உரப்பிரச்சினைக்கு  இந்தியாவின் நனொ நைட்ரிஜன் திரவ உரம் எந்தவகையிலும் தீர்வாகப்போவதில்லை. 

அதனால் இரண்டு வருடங்களுக்காவது இரசாயன உரத்தை வழங்கவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமா கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் உரப்பிச்சினை பாரியதொரு பிரச்சினையாக மாறி இருக்கின்றது. இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாணவேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அதன் பிரகாரம் ஜனாதிபதியை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியபோதும் இதுதொடர்பாக எடுத்துக்கூறினோம். 

சேதன பசளையை முன்னெடுத்துச்செல்லவும் இரசாயன உரத்தை தடைசெய்யவும் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். ஜனாதிபதியின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. என்றாலும் அதனை திடீரென மேற்கொள்ள முடியாது.

அத்துடன் விவசாயிகளின் உரப்பிச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் இந்தியாவில் இருந்து நனொ நைட்ரிஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானித்திருக்கின்றது. குறித்த உரம் தொடர்பாக தெளிவுபடுத்தும் கையேடு ஒன்றையும் இதன்போது ஜனாதிபதி வழங்கினார். 

குறித்த கைகேட்டை வாசித்த பின்னர்தான் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் உரத்தின் தன்மையை அறிந்துகொள்ளமுடியுமாக இருந்தது. அதாவது, குறித்த உரத்தினால் விவசாயிகளின் தேவையை ஒருபோதும் பூர்த்திசெய்ய முடியாது. அந்த உரத்தில் கலக்கப்பட்டிருக்கும் நைட்ரிஜனின் அளவு 4 வீதமாகும். 

ஆனால் மஹிந்த ராஜாங்க ஜனாதிபதியாக இருந்தபோது, நான் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சராக இருந்து சேதன பசளை உற்பத்தி சிம்டெக் நிறுவனத்தினால் மேற்கொண்டோம். அந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நைட்ரிஜன் திரவ உரத்தைவிட 10 மடங்குக்கும் அதிக தரம் வாய்ந்த தாகும். 

இந்தியாவின் உரத்தில் நைட்ரிஜனின் அளவு 4வீதமாகும். ஆனால் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரத்தில் நைட்ரிஜனின் அளவு 40 வீதமாகும். அதனால் சிம்டெக் நிறுவனத்தை விரிவாக்கி உரம் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமக்கு தேவையான சேதன உரத்தை உற்பத்தி செய்துகொள்ளலாம்.

அத்துடன் அரசாங்கம் திடீரென இரசாயன உரத்தை தடைசெய்தது பிழையான முறையாகும்.பிழையான கொள்கையை பின்பற்றியதால்தான் இன்று பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது. அதனால் படிப்படியாகவே இரசாயன உரத்தில் இருந்து சேதன உரத்துக்கு மாறவேண்டும். 

அதனால் தேயிலை, ரம்பர், நெல் போன்ற செய்கைகளுக்கு இன்னும் இரண்டுவருடங்களுக்காவது இரசாயன உரத்தை வழங்கவேண்டும்.

அதன் மூலமே தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காரணமுடியும். இல்லாவிட்டால் எதிர்வரும் பெரும்போகத்துக்கு விவசாயிகளுக்கு தேவையான உரம் கிடைக்காவிட்டால் உற்பத்தி வீழ்ச்சியடையும். அதன் காரணமாக அரிசி மற்றும் இதர உணவுப்பாெருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right