(எம்.மனோசித்ரா)

மோசடிக்காரர்கள் தொடர்பில் வெளிப்படுத்துபவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அச்சமூட்ட முயற்சிக்கிறது.

இதுவே அரசாங்கத்தின் கொள்கை ஆகும். மோசடிகளை வெளிப்படுத்துவர்களை ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

மோசடிக்காரர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பதன் ஊடாக அரசாங்கம் எதனை எதிர்பார்க்கிறது என்றும் ஜே.சி.அலவத்துவல கேள்வியெழுப்பினார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உர விவகாரம் தொடர்பில் திங்கட்கிழமை (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

விவசாயிகளுக்கு உரத்தினை வழங்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கம் , இந்தியாவிலிருந்து நனோ திரவ உரத்தினை இறக்குமதி செய்துள்ளது. இது இரு அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தம் ஊடாகக் கொண்டு வரப்பட்ட உரம் என்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் தனியார் நிறுவனமொன்றுக்கே எமது நாட்டு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. எனினும் வைப்பிலிடப்பட்ட பணத்திற்குரிய திரவ உரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுமில்லை.

அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இது தொடர்பிலேயே ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளோம். 

எனவே நாட்டுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

ஊடகங்கள் இவை தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இவ்வாறான ஊழல் , மோசடிகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை அரசாங்கம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கிறது.

இந்த சம்பவத்தில் மாத்திரமின்றி சதொச வெள்ளை பூண்டு விவகாரத்தில் இவ்வாறு இடம்பெற்றது. ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பதன் மூலம் அரசாங்கம் எதை எதிர்ப்பார்க்கிறது?

மோசடிக்காரரகள் தொடர்பில் வெளிப்படுத்துபவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுவார் என்று அரசாங்கம் அச்சமூட்ட முயற்சிக்கிறது. ஆனால் மோசடிக்கார்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே அரசாங்கத்தின் கொள்கை ஆகும். 

மக்களின் நன்மை கருதி அளித்துள்ள இந்த முறைப்பாடு தொடர்பிலாவது முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கேட்க விரும்புகின்றோம்.

காரணம் இன்று மோசடிகளை வெளிப்படுத்துவர்களை ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்றார்.