புது டெல்லியில் இன்றைய தினம் நடந்த 67 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். 

Image

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது விருதை தனது வழிகாட்டியான கே பாலச்சந்தர், அவரது மூத்த சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் மற்றும் அவரது சிறந்த நண்பர் ராஜ் பகதூர் ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.

நடத்துனராக இருந்தபோது தன்னில் இருந்த நடிகரை அடையாளம் காட்டிய தனது நண்பரும் பேருந்து ஓட்டுநருமான ராஜ் பகதூருக்கும் இதன்போது ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.

2021 ஏப்ரல் மாதம், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்திய சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக விருது வழங்கும் விழா தாமதமானது.

1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் அறிமுகமானார். 

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவரது திரையுலக வாழ்க்கையில், தலைவர் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர், 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன், இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுகிறார்.

தற்சமயம் ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.