(எம்.எம்.சில்வெஸ்டர்)

23 வயதுக்குட்டபட்ட ஆசிய கால்பந்தாட்ட கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் சிரிய கால்பந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இன்று திங்கட்கிழமை இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டிக்கு முன்பதாக கட்டார் அணிக்கும்  யேமன் அணிக்கும் இடையிலான போட்டி  இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

கட்டார் நாட்டு தலைநகரான தோஹாவில் நடைபெறும் ஏ குழுவுக்கான தகுதிகாண் போட்டித்  தொடரில் இலங்கை, கட்டார், யேமன், சிரியா ஆகிய நாடுகளின் 23 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன.

சசங்க தில்ஹார தலைமையிலான 23 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் , அசேல மதுஷான், சத்துரங்க  லக்சான்,டேனியல் மெக்ராத் கோமஸ்,கிஹான் சத்துரங்க, மொஹமட் குர்ஷீத், மொஹமட் முர்ஷீத், மொஹமட் முஸ்பிர், பெத்தும் விமுக்தி,ராசா ரூமி, ரிப்கான் மொஹமட், அப்துல் பாசித், சபீர் ரசூனியா,செனால் சந்தேஷ், ஷிஷான் பிரபுத்த, கண்ணன் தனுஷன்,யுவராசா தேனுஷன், பதுர்டீன் தஸ்லீம், உதயங்க பெரேரா, விக்கும், ருமெஷ் மெண்டிஸ், மொஹமட் அமான், நுவன் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த மொஹமட் அமானுல்லாஹ்வின் பயிற்றுவிப்பின் கீழ் இந்த அணி களமிறங்குகிறது.

இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் கட்டார் அணியை எதிர்வரும் 28 ஆம் திகதியன்றும், யேமன்  அணியை 31 ஆம் திகதியன்றும் சந்திக்கவுள்ளன. 

இதேவேளை, இந்த தகுதிகாண் போட்டித் தொடரில் மொத்தமாக 42 அணிகள் 10 குழுக்களில் போட்டியிடுகின்றன. குழு கே யில் இடம்பெற்றிருந்த வட கொரியா போட்டித் தொடரிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து 41 நாடுகளின் அணிகளே பங்கேற்கின்றன.

இந்த 11 குழுக்களும் அந்தந்த குழுக்களுக்கு  வழங்கப்பட்டுள்ள நாடுகளில் விளையாடவுள்ளன.

அதாவது குழு ஏ கட்டாரிலும், குழு பீ மற்றும் குழு  ஜீ தஜிகிஸ்தானினும்,குழு சீ பஹ்ரேனிலும், குழு டி குவைட்டிலும், குழு ஈ ஐக்கிய அரபு இராச்சியத்திலும், குழு எப் ஜோர்தானிலும், குழு எச் சிங்கப்பூரிலும், குழு ஐ கிர்கிஸ்தானிலும், குழு ஜே மொங்கோலியாவிலும், குழு கே ஜப்பானிலும் விளையாடவுள்ளன.