விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சக்கர நாற்காலியில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அவரை இவ்வாறு இன்றையதினம் 25 ஆம் திகதி நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜா,  அசாத் சாலியை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை சிறைச்சாலைகள்  அத்தியட்சருக்கு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதுடன்  எதிர்வரும் நவம்பர் மாதம்  2 , 9 , 11 ஆகிய திகதிகளில் மீண்டும் விசாரண மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.