(இராஜதுரை ஹஷான்)

உர இறக்குமதி விவகாரத்தில் அரசாங்கம் விவசாயிகளினதும், நாட்டினதும் நலனை கருத்திற் கொண்டு தற்துணிவுடன் செயற்பட வேண்டும். அதனை விடுத்து தூதரகங்களில் தீர்மானங்களை செயற்படுத்த கூடாது. 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் புறக்கணிக்கப்பட்டதன் பின்னரும் மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திரம் பெற்றதன் பின்னர் தேசிய மட்டத்தில் 36 சதவீதமான அரிசி மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆட்சியில் இருந்த அரச தலைவர்களின் சிறந்த திட்டமிடலுக்கு அமைய நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி வகைகள் ஏதும் பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால் தற்போது அரசாங்கம் சகல வகையான அரிசியினையும் முழுமையாக இறக்குமதி செய்துள்ளது. தீர்மானத்தினால் தேசிய மட்டத்திலான அரிசி உற்பத்தி பாரிய விளைவுகளை எதிர்க்கொள்ளும்.

சேதனபசளை பயன்படுத்தி எந்த நாடும் விவசாயத்துறையில் முன்னேற்றமடையவில்லை. எவ்விதமான திட்டமிடலுமில்லாமல் இரசாயன உரம் இறக்குமதி தடைசெய்யப்பட்டதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சேதன பசளைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயத்துறை அமைச்சின் செயலாளர்கள் பலர் பதவி நீக்கப்பட்டுள்ளார்கள். இரசாயன உரம் இறக்குமதி முழுமையாக தடை செய்தமை முற்றிலும் தவறானது என விவசாயத்துறை அமைச்சின் தற்போதைய செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் எத்தனை நாட்கள் செயலாளர் பதவியில் இருப்பார் என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போது இந்தியாவில் இருந்து நெனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது பிறிதொரு மோசடியாகும். இந்த திரவ உரத்தை பயன்படுத்த முன்னர் வேறொரு பீடை நாசினி பயன்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் இதனை பயன்படுத்துவது பயனற்றது. என மெல்பேர்ன் பல்கழைக்கழகத்தின் முன்னாள் தாவரவியல் பேராசிரியர் சமன்சேனாதீர தெரிவித்துள்ளார்.

தற்போது 100,000 லிட்டர் விமானம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 1 லிட்டர் உரத்தின் விலை அந்த நாடுகளின் இணையதளங்களில் கிடைக்கிறது. இது இந்தியாவில் 480 இந்திய ரூபாவாகும்.  

இலங்கையின் அமைச்சரவைப் பத்திரத்தில் ஒரு லீற்றர் உரத்தின் கொள்வனவு விலை 24.90 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் உரத்தின் விலை சுமார் ரூபா 1,400 ரூபாவாகும். ஆனால் இலங்கையில் விற்பது 5,000 ரூபாவிற்காகும்.  வெளிப்படையான மற்றுமொரு  மோசடியாகும்.

சீனி மோசடி,வெள்ளை  பூண்டு மோசடி, என்டிஜென் பரிசோதனை மோசடி, பிசிஆர் பரிசோதனை மோசடி,  ஆகிய மோசடிகளை போன்ற பிறிதொரு மோசடியாக இதனை கருத வேண்டும். 

அண்மையில் இந்தியாவிலிருந்து 1,400 ரூபாவிற்கு கொண்டு வரப்பட்ட திரவ  உரம் இலங்கையில் 5,000 ரூபாவிற்கு விற்கப்பட்டது. இதை யார் இறக்குமதி செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஏ.பெரேரா மற்றும் வீரசிங்க என்ற இரு நபர்கள் மக்கள் வங்கி  கொழும்பு நகர மண்டபம் கிளையினூடாக இந்தியாவிற்கு நிதி அனுப்பி இறக்குமதி செய்கிறார்கள்.

நாட்டிற்கு ஒரு சீன நிறுவனம் இலட்சக்கணக்கான தொன் உரங்களை கொள்வனவு செய்துள்ளது. இதில் பெஸலஸ் மற்றும் ஏர்வேனியா போன்ற இந்நாட்டுக்குப் ஒவ்வாத பற்றீரியாக்கல் அடங்கியுள்ளதாக தேசிய தாவரங்கள் தொற்று நீக்கல் நிலையம் இரு முறைகள் உறுதிப்படுத்தியது.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி 14 பேர் கொண்ட விவசாயத்துறைக்கு படையணியை நியமித்துள்ளார். அதில் 8 பேர் உரம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.  எவ்வாறாயினும், இந்த நாட்டின் அதிகாரிகளைக் கட்டுப்படுத்த இந்த நபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த நாட்டில் உள்ள விவசாய நிபுணர்களுக்கு அரசாங்க அதிகாரிகளைக் கையாள்வதற்கான பொறுப்பு வாய்ந்த  அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது.  

உர இறக்குமதி விவகாரத்தில் அரசாங்கம் விவசாயிகளினதும், நாட்டினதும் நலனை கருத்திற் கொண்டு தற்துணிவுடன் தீர்மானம் எடுக்க வேண்டும். 

சீனாவில் இருந்து இறக்குதி செய்ய்பட்ட உரத்தில் நாட்டின் காலநிலைக்கும், மண்வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பற்றீரியாக்கல் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இவ்விடயத்தில் எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஏனெனில் இது இராஜதந்திர பிரச்சினையல்ல என்றார்.