டுபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டி-20 உலகக் கிண்ணத்தின் 16 ஆவது ஆட்டத்தில் பரம எதிரிகளை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல் உலகக் கிண்ண வெற்றியை பாகிஸ்தான் பதிவுசெய்துள்ளதுடன், வரலாற்றையும் மாற்றி அமைத்துள்ளது.

Image

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான மொஹட் ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் ஆகியோர் 152 ஓட்டங்களை துரத்துவதற்கு இலகுவான நகர்வுகளை முன்னெடுத்தனர்.

அதனால் 18 ஆவது ஓவருக்குள் இலக்கை அடைந்து இந்தியாவுடனான உலகக் கிண்ண பதிவுகளை உடைத்து டி-20 போட்டியில் முதல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது பாகிஸ்தான்.

வெற்றி இலக்குக்கான ஓட்டத்தில் ரிஸ்வானும் பாபரும் முறையே 78 மற்றும் 68 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்து உறுதியான அடித்தளத்தை அமைத்தனர். 

Image

இருவரும் எதிரணிக்கு ஒரு வாய்ப்பினை கூட விட்டுக் கொடுக்காது தமக்கான பணியை கச்சிதமாக நிறைவேற்றி 2021 ஒக்டோபர் 24 டுபாயில் சிரித்திரம் படைத்தனர்.

இந்தியாவுடனான ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் இது பாகிஸ்தானின் முதல் வெற்றியாகும் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் குறுகிய வடிவத்தில் (டி-20) 9 ஆட்டங்களில் இரண்டாவது வெற்றியாகும். 

நேற்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு விராட் கோஹ்லியைத் தவிர எவரும் சொல்லும் அளவுக்கு கைகொடுக்கவில்லை. கோஹ்லி மாத்திரம் 49 பந்துகளில் 57 ஓட்டங்களை எடுத்தார்.

இது டி-20 சர்வதேசப் போட்டிகளில் கோஹ்லியின் 29 ஆவது அரைசதம் ஆகும்.

இறுதியாக இந்தியா 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி, (4 ஓவர்களில் 3/31) இந்தியாவின் அச்சுறுத்தும் தொடக்க ஆட்டத்தால் உருவாக்கப்பட்ட சிக்கலான சூழ்நிலையை சிதறடித்தார்.

அது மாத்திரமன்றி தனது கடை ஓவரிலும் அவர் விராட் கோஹ்லியை ஆட்டமிழக்க வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.