(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ள சாரதிகள், நடத்துனர்கள் அல்லது உதவியாளர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றிருப்பது அத்தியாவசியமானதாகும் என்று மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சகல பிரதேசங்களில் சோதனைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கமைய இன்றைய தினம் சேவையில் ஈடுபடும் போக்குவரத்துக்களின் சாரதிகள் , உதவியாளர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார் என்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தீடீரென எடுத்துள்ள தீர்மானத்தின் காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தாம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எம்மால் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள் அதே நிலைமையிலேயே காணப்படுகின்றன. 

வாகன அனுமதிப்பத்திரம், காப்புறுதி என்பன நிறைவடைந்துள்ளன. அது மாத்திரமின்றி வாகள உதிர்ப்பாகங்களும் பழுதடைந்துள்ளன. 

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு ஏதேனுமொரு வகையில் எமக்கு நிவாரணத்தை வழங்குமாறு அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்தும் வலியுறுத்தினோம். எனினும் எமக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இது மாத்திரமின்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த வழிகாட்டல்கள் தொடர்பிலும் எமக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. 

எமக்கான நிவாரணங்கள் வழங்கப்படாவிட்டால் வழமையைப் போன்று பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுவது கடினமாகும் என்றும் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.