(எம்.ஆர்.எம்.வசீம்)

சிறிலங்கா கொம்யூனிஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு இன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ගුරුන්ට 'පාට් දැමු' කොල්ලුරේ සභාපති තනතුරින් නෙරපයි

வடமேல் மாகாண ஆளுநராக இருந்து வரும் ராஜா கொல்லுரே, கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி, 21ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருகை தராத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளத்தை இடைநிறுத்துவதாகவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்த கூற்று பாரிய சர்ச்சையாக மாறியதுடன், எதிர்கட்சிகள் உட்பட தொழிற் சங்கங்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியது. அத்துடன் ஆளுநரின் அந்த கூற்றை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்திருந்தது. ஏனெனில் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கவாத கட்சியாகும். அவ்வாறான நிலையில் ஆசிரிய தொழிற்சங்கங்களின் போராட்டத்தை அவமதிக்கும் வகையில் அமைந்ததுடன் கட்சியின் கொள்கைக்கும் முரணாக இருந்தது.

அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழு இன்று கட்சியின் தலைமையகத்தில் கூடியபோது, ஆளுநர் ராஜா கொல்லுரேயை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது. இதன்போது அதற்காக வாக்கெடுப்ப நடத்தப்பட்டுள்ளது. 

ராஜா கொல்லுரேயும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், வாக்கெடுப்பின்போது அவருக்கு ஆதரவாக இருந்த சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்திருக்கின்றனர். இருந்தபோதும் 50 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரும்பாலானவர்கள் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

அதன் பிரகாரம் அவர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் மத்திய குழு உறுப்பினர் தெரிவித்தார்.