(நா.தனுஜா)


கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் அபகரிக்கப்படுகின்றன. இருப்பினும் தற்போதுவரை அதற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 
மக்களின் காணிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில், நாட்டை ஆட்சிசெய்வது அரசாங்கமா? அல்லது சதிக்கும்பலா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என்று ஒன்றிணைந்த பிரஜைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: 


ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கியதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவினால் அடிக்கடி கூறப்பட்ட வாசகமாக 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற வசனம் காணப்பட்டது. 


ஆனால் தற்போது கொழும்பு உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நில அபகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு சட்டமும் ஏனைய சாதாரண மக்களுக்கு பிறிதொரு சட்டமும் பிரயோகிக்கப்படுவதை அவதானிக்கமுடிகின்றது. 


குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுள்ள நிலங்கள் யாரால், எவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அரசியல்வாதியொருவர் மீது இதனுடன் தொடர்புடைய தீவிர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 


அதேவேளை இவ்வாறு நில அபகரிப்பில் ஈடுபடுவோருக்கு கொழும்பு தெற்கு பொலிஸார் உதவிகளை வழங்குகின்றனரா? என்ற வலுவான சந்தேகமும் காணப்படுகின்றது. ஏனெனில் இந்த பொலிஸ் அதிகாரிகள் நில அபகரிப்புச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடிய நபர்களுடன் நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று உணவருந்தி களியாட்டத்தில் ஈடுபடுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. 


ஒருபுறம் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள தேசிய சொத்துக்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த சொத்துக்கள் அரசாங்கத்தினால் சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 


மறுபுறம் அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் சாதாரண பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் சட்டவிரோதமான முறையில் அபகரிக்கப்படுகின்றன. 


இருப்பினும் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உரியவாறான சட்டநடவடிக்கை எடுக்கப்படாமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டுமக்களுக்குச் சொந்தமான காணிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில், நாட்டை ஆட்சிசெய்வது அரசாங்கமா? அல்லது சதிக்கும்பலா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.