(எம்.மனோசித்ரா)

இரசாயன உரத்தைக் கொண்ட சீன கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளமை வரவேற்கக் கூடிய விடயமாகும். 
எனினும் இந்தத் தீர்மானத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அபாயம் மிக்க இந்த உரம் ஆட்சியாளர்களின் சுயநல நோக்கத்திற்காக பாவனைக்கு அனுமதிக்கப்படுமாயின் அது ஒட்டுமொத்த விவசாய கட்டமைப்பையும் சீரழித்து விடும் என்று எச்சரிப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இரசாயன உரப்பாவனையை தடை செய்வதற்கு ஜனாதிபதியால் திடீரென எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாரிய நெருக்கடி நிலைமையின் காரணமாக சீனாவிலிருந்து 96 மெட்ரிக்  தொன் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
எனினும் குறித்த உரத்தின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த பரிசோதனை இடம்பெற்றுக் கொண்டிந்த சந்தர்ப்பத்திலேயே, அதாவது பரிசோதனை முடிவின் அறிக்கை வெளியிடப்பட முன்னரே சீன இரசாயன உர கப்பல் நாட்டிலிருந்து வெளியேறியது.
ஆனால் பரிசோதனை முடிவு கிடைக்கப் பெற்ற பின்னரே கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக அரசாங்கத்தினால் பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் இரசாயன உரத்தை கொண்ட கப்பல் செப்டெம்பர் 23 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும், ஒக்டோபர் 22 ஆம் திகதி (நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் குறித்த உர தயாரிப்பு நிறுவனமான கிண்டாவோ நிறுவனம் விவசாய திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.


எவ்வாறிருப்பினும் இந்த அறிவிப்பு கிடைத்த பின்னர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று துறைமுக அதிகாரசபை உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை, துறைமுக அதிகாரசபையினால் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 
மாறாக அபாயம் மிக்க இந்த உரம் ஆட்சியாளர்களின் சுய நல நோக்கத்திற்காக பாவனைக்கு அனுமதிக்கப்படுமாயின் அது ஒட்டுமொத்த விவசாய கட்டமைப்பையும் சீரழித்து விடும் என்று எச்சரிக்கின்றோம்.

தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள நனோ யுரீயா உரம் இதுவரையில் இலங்கையில் பயன்படுத்தப்பட்டவொன்றல்ல. இந்தியாவில் ஜூன் மாதம் இந்ந உரம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டு, ஆகஸ்டிலேயே இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 


இந்த உரத்தை இறக்குமதி செய்வதற்காகத்தான் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டனவா என்ற சந்தேகம் எழுகிறது. 


மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சீரழிவான மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளார். 
உர பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.