(நா.தனுஜா)

திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதியின் மூலம் பாரிய நிதிமோசடி இடம்பெற்றிருக்கின்றது. இருநாடுகளுக்கு இடையிலான கொடுக்கல், வாங்கல்களின்போது ஒரு நாட்டிலிருந்து மற்றைய நாட்டின் அரசாங்கத்திற்கோ அல்லது அரசுக்குச் சொந்தமான கட்டமைப்பிற்கோ நிதி மாற்றம்செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமாகும். 

ஆனால் இவ்விவகாரத்தில் 29 கோடி ரூபா பணம் தனியார் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. யாருடைய உத்தரவின்பேரில் இவ்வாறு நிதி மாற்றம் செய்யப்பட்டது? இத்தகைய பாரிய மோசடியில் ஈடுபடுவதற்காகத்தான் இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதா? என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

 அதுமாத்திரமன்றி இவ்விவகாரம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'கொவி ஹதகெஸ்ம' செயற்திட்டத்தின்கீழ் திஸ்ஸமஹாராமவில் உள்ள பந்தகிரிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித்தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் கடந்தகால நிலைவரங்களையும் தற்போதைய நிலைவரங்களையும் ஒப்பீடுசெய்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. தமது தலைவிதி இப்போது எவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றது? என்பது குறித்து விவசாயிகள் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

 விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான இரசாயன உரம், கிருமிநாசினிகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியைத் தடைசெய்துவிட்டு இப்போது விவசாயத்தில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு அரசாங்கம் உத்தரவிடுகின்றது.

 விவசாயத்துறைசார் நிபுணர்களின் கருத்துக்களின் பிரகாரம் சேதன உரத்தை மாத்திரம் பயன்படுத்தி விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், அவற்றின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்படும்.

தேசிய ரீதியான விவசாய உற்பத்தி குறைவடைவதுடன் நாட்டில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும். நெல்லுற்பத்தியில் சுயதேவைப்பூர்த்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம் என்று கூறிய அரசாங்கம், இப்போது வெளிநாடுகளிலிருந்து நெல்லை இறக்குமதி செய்கின்றது.

 இரசாhயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதியைத் தடைசெய்வதாகக் கூறிவிட்டு, அதற்குப் பதிலாக திரவ நனோ நைட்ரஜன் உரத்தை அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கின்றது. நனோ நைட்ரஜன் உரத்தைப் பயன்படுத்துவதனால் எதிர்பார்க்கப்படும் பலனைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்று விவசாயத்துறைசார் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். 

ஆனால் இந்த உர இறக்குமதியின் மூலம் பாரிய நிதிமோசடி இடம்பெற்றிருக்கின்றது. இருநாடுகளுக்கு இடையிலான கொடுக்கல், வாங்கல்களின்போது ஒரு நாட்டிலிருந்து மற்றைய நாட்டின் அரசாங்கத்திற்கோ அல்லது அரசுக்குச் சொந்தமான கட்டமைப்பிற்கோ நிதி மாற்றம்செய்யப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமாகும். 

ஆனால் இவ்விவகாரத்தில் 29 கோடி ரூபா பணம் தனியார் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு தனியார் கணக்கிற்கு மாற்றுவதென்பது நிதிமுறைகேடாகும். யாருடைய உத்தரவின்பேரில் இவ்வாறு நிதி மாற்றம் செய்யப்பட்டது? எனவே இந்த திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதி மீதான கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் உடனடி சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ஆகவே இத்தகைய பாரிய மோசடியில் ஈடுபடுவதற்காகத்தான் இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கின்றது. 69 இலட்சம் மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவருகின்றது. எனவே நீண்ட வரிசைகளில் நிற்கும் யுகத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்காகவா எம்மைத் தோற்கடித்து இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றினீர்கள்? என்று தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களிடம் கேள்வியெழுப்ப விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.