(எம்.மனோசித்ரா)

கடவத்தை பொலிஸ் பிரிவில் சந்தேகநபரொருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது , உறவினர்கள் மற்றும் அயலவர்களால் கடமைக்கு இடையூறு விழைவிக்கப்பட்டுள்ளமையால் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய உப பொலிஸ் பரிசோதகர் , அதனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்காமையால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடவத்தை பொலிஸ் பிரிவில் குப்பியாவத்த பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்குதல்களுக்கு உள்ளாகி நபரொருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த நபரை தாக்கிய சந்தேகநபரை தேடும் பணிகள் கடவத்தை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் கடந்த வியாழக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது காயமடைந்த நபரை தாக்கிய சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது , அவரது உறவினர்களும் , அயலவர்களும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விழைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த உப பொலிஸ் பரிசோதகரால் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு குறித்த பகுதியிருந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரது கடமையை சரியாக செய்துள்ள போதிலும் , வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியதை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவில்லை.

இதன் காரணமாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்க ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கான ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்காமையின் காரணமாகவே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.