(எம்.எம்.சில்வெஸ்டர்)

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான 4 ஆவது போட்டியில் ரவீன் டி சில்வாவின் அபாரமான துடுப்பாட்டம் மற்றும் அணித்தலைவர் துனித் வெல்லாலகேவின் அசத்தலான பந்துவீச்சு கைகொடுக்க 19 வயதுக்குட்டபட்ட இலங்‍கை கிரிக்கெட் அணி ஒரு விக்‍கெட்டால் வென்றது. 

இதன் மூலம் இவ்விரு அணிகளுக்கி‍டையிலான 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்‍கை தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் வென்று 4 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான  5 போட்டிகள் கொண்ட இளையோர்  சர்வதேச போட்டித் தொடரின் 4 ஆவது போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

No description available.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது. 

 துடுப்பாட்டத்தில் அவ்வணியின் தலைவர் மெஹரூப் ஹசன் 52 ஓட்டங்களையும், அரிபுல் இஸ்லாம் 50 ஓட்டங்களையும்,அயிச் மொல்லாஹ் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றறுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை சார்பாக அணித் தலைவர் துனித் வெல்லாலகே 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். இவரைத் தவிர, வினூஜ ரண்புல், தனல் ஹேமானந்த, சசங்க நிர்மல், ரவீன் டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்‍பெடுத்தாடிய இலங்கை 49.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 225 ஓட்டங்களை பெற்று ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது. 

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதன்போது 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பவன் பத்திராஜ மற்றும் ரவீன் டி சில்வா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

இலங்கை 119 ஓட்டங்களை பெற்று வலுவான இருந்த வேளையில் பவன் பத்திராஜ 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரவீன் டி சில்வா சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அரைச்சதம் அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 

இவ்வாறு இலங்கை வெற்றி இலக்கை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கையில், துனித் வெல்லாலகே (16), சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ரவீன் (88), வினூஜ ரண்புல் (23) வனுஜ சஹன் (1) ஆகியோர் சீரான இடை‍வெளிகளில் ஆட்டமிழந்தனர். 

இதனால் இலங்கை அணி 221 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழக்கவே போட்டியில் சுவாரஷ்யம் தொற்றிக்கொண்டது. 

எவ்வாறாயினும், இலங்கையின் கடைசி துடுப்பாட்ட ஜோடி தமது விக்கெட்டை தாரைவார்க்காது 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்கள் அடித்து வெற்றி இலக்கை அடைந்தது.

பந்துவீச்சில் கடந்த போட்டியைப் போலவே முஷ்பிக் ஹசன் 3 விக்கெடடுக்களையும்,  அஷொன் அபிப் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றினர். இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 5 ஆவதும் கடைசியுமான போட்டி 25 ஆம் திகதியன்று நடை‍பெறும்.

போட்டிச் சுருக்கம்

19 வயதுக்குட்பட்ட பங்களா‍தேஷ் அணி - 224/8 (50)                                                                                                                        19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி - 225/9 (49.3)