ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம்.

எமது சைவ சமயத்தின் முதுசம் என விளங்கிய சைவப்புலவர் செல்லத்துரை அவர்களது இறைபத செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தோம்.

அனைவரது அன்புக்குரியராகவும், மதிப்பார்ந்தவராகவும், போற்றுதலுக்குரியவராகவும் விளங்கியவர் அமரர் செல்லத்துரை அவர்கள்.

சைவப்புலவர் சங்கத்தினூடாக இலங்கை முழுவதும் பல சைவப்புலவர்கள் உருப்பெறக்காரணமானவர்.

புராணபடன மரபில் கைதேர்ந்தவர். புராணபடன மரபு இலங்கையில் தழைக்க வேண்டும் என தன்னுடைய சக்திக்கு ஏற்ற வகையில் பல முயற்சிகள் செய்து இயன்ற வெற்றி கண்டவர்.

தனது சீர்பெற்ற கல்விப்பணி மூலம் பல உயர்பண்பாளர்களை உருவாக்கிய பெருந்தகை. சந்தேகம், ஆலோசனை என யார் கேட்டாலும் எந்த மறுப்பு, தாமதம் எதுவும் இன்றி உயரிய ஆலோசனைகள் வழங்குவதில் வல்லவர். சைவ வாழ்வியலை பாதுகாத்து பேணியதுடன் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.

அமரர் கலாபூஷணம் செல்லத்துரை ஐயா அவர்கள் எமது அச்சுவேலி குமாரசுவாமி குருக்கள்  அவர்கள் மீதும் அவர்தம் குடும்பத்தினர் மீதும் அன்பு, பாசம், மரியாதை, கௌரவம், உயர்ந்த எண்ணம், பற்றுறுதி கொண்டவர்.

குருக்கள் அவர்கள் ஸ்தாபித்த சரஸ்வதி வித்தியாலயத்தில் குருக்கள் காலத்தில் ஆசிரியப்பணி புரிந்துள்ளார்.

நிறைவாக தனது கல்விப் பணியில் அதிபராக தனது பணியினை  நிறைவு செய்து, இறைபதமெய்தும் வரை பல்வேறு கோணங்களில் தனது சமூகப்பணியை விரிவான முறையில் செயல்படுத்தியவர்.

இத்தகைய பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த சைவப்பெரியார் அவர்களது மறைவு சைவ மக்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. ஆனாலும என்ன செய்வது இறை நியதியை ஏற்க வேண்டியுள்ளது. 

 அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கின்றோம் அன்புடன். 

                        . சாந்தி. 

கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். 

தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.