நா.தனுஜா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான 46ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான கருத்திட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதை வலியுறுத்தும் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அத்தீர்மானத்தின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு, இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஆதாரங்களைத் திரட்டி அவற்றைக் களஞ்சியப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

 

அதன்படி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுதல், நீதிமன்றச்செயன்முறைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கல் ஆகியவற்றுக்கு ஏற்புடைய வகையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் இயலுமையை வலுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

 

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் நிலைவரங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து அறிக்கையிடுமாறு உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திடம் மனித உரிமைகள் பேரவை வேண்டுகோள்விடுத்திருந்தது. 

அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் வாய்மூல அறிக்கையையும் 49 ஆவது கூட்டத்தொடரில் எழுத்துமூல அறிக்கையையும் மேலதிக பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையை 51 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்குமாறும் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே 46/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட மேற்கூறப்பட்ட பணிகளை முன்னெடுப்பதற்கான 'இலங்கையின் பொறுப்புக்கூறல் கருத்திட்டம்' ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் ஜெனீவாவைத் தளமாகக்கொண்டு அக்கருத்திட்டம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.