எம்.மனோசித்ரா

நீர்கொழும்பு - கொச்சிக்கடை நகரத்தில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தீர்வினை வழங்கும் வகையில் அந்த பிரதேசத்தினூடாக செல்லும் வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கொச்சிக்கடை நகரத்தில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தீர்வினை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

 அதற்கமைய தலுபொத சந்தியிலிருந்து தோப்புவ பாலம் வரை 5.6 கிலோமீற்றர் வீதியை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கொச்சிக்கடை நகர எல்லையில் 820 மீற்றர் 4 வழிகளைக் கொண்டு வீதியை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

 பேலியகொட - புத்தளம் வீதியில் அநுராதபுரம் , புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து வரும் வாகனங்கள் கொச்சிக்கடை நகரத்திற்கு வருகை தராமல் செல்வதால் அந்த பகுதியில் வியாபார செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணிகள் குறித்து அவதானம் செலுத்தியே குறித்த வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.