(எம்.மனோசித்ரா)

யுத்தத்தில் கைவைக்க வேண்டாம் என்று பலர் கேட்டு;க் கொண்ட போதிலும் , 30 ஆண்டு கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததைப் போலவே , எந்த தடைகள் ஏற்பட்டாலும் பசுமை விவசாயத்தை வெற்றிபெறச் செய்வேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , மக்களைத் தூண்டும் அரசியலில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டு;க் கொண்டுள்ளார்.

May be an image of 2 people, people standing, flower and outdoors

(எம்.மனோசித்ரா)

உலகின் எந்தவொரு இரசாயன உரக் கம்பனிகளும் பல்வேறு சக்திகளைத் தூண்டிவிட்டு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அஞ்சப் போவதில்லை. சரியான தீர்மானங்களை எடுப்பதற்காகவே மக்கள் என்னை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்துள்ளனர். மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உடபத்தாவ , புன்னெஹெபொல சேதன உர தயாரிப்பு மத்திய நிலையம் மற்றும் சேதன பயிர்ச்செய்கை என்பவை தொடர்பில் இன்று சனிக்கிழமை கண்காணிப்பினை மேற்கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ,

நான் விவசாயிகளுக்கே முன்னுரிமையளித்தேன். அந்த நம்பிக்கையை ஒருபோதும் இல்லாமலாக்க போவதில்லை. விவசாய மக்களின் குறை , நிறைகளை கேட்டறிந்து தீர்மானங்களை எடுக்கப்படும். இதற்கிடையில் மக்களைத் தூண்டும் அரசியலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எதிர்கால சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்.

எனது எதிர்பார்ப்பு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகும். அதற்காக அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான முடிவுகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன். அன்று யுத்தத்தில் கைவைக்க வேண்டாம் என்று பலர் கேட்டு;க் கொண்ட போதிலும் , 30 ஆண்டு கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததைப் போலவே , எந்த தடைகள் ஏற்பட்டாலும் பசுமை விவசாயத்தை வெற்றிபெறச் செய்வேன்.

எனக்கு தேவையானது வாக்குகள் அல்ல. மக்களுக்கு சரியானதை செய்ய வேண்டும். சரியான விடயங்களுக்காக அச்சமின்றி முடிவுகளை எடுக்கவும், மக்களின் தேவைகளை மட்டுமே பார்க்கவும் தயாராக இருக்கின்றேன். உலகின் எந்தவொரு இரசாயன உரக் கம்பனிகளும் பல்வேறு சக்திகளைத் தூண்டிவிட்டு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அஞ்சப் போவதில்லை. சரியான தீர்மானங்களை எடுப்பதற்காகவே மக்கள் என்னை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்துள்ளனர்.

இவ்வாறு நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்தது பருப்பு மற்றும் அரிசியின் விலைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றால் அதற்கு நான் தேவையில்லை. முந்தைய அரசாங்கங்கள் கூட இதைச் செய்ய முயற்சித்தன. இது கடினமான பணியாகும். பாரம்பரிய பயிற்செய்கையை எப்படி செய்வது என்று எனது முன்னோர்களுக்கு தெரியும். ஆனால் துரதிஷ்டவசமாக எந்த தலைவரும் இந்த முடிவை எடுக்கவில்லை.

அதை விட மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்காகவே நான் முயற்சிக்கின்றேன். விசேடமாக இந்த விவசாயத் துறை தொடர்பில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளேன். ஆரம்பத்தில் நாம் உரத்தை இலவசமாக வழங்கினோம். உண்மையில் விவசாயியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே இலவசமாக உரம் வழங்கப்பட்டது. அதேபோல், நெல்லின் உத்தரவாத விலையையும் அதற்காகவே அதிகரித்தோம் என்று குறிப்பிட்டார்.