இராஜதுரை ஹஷான்

பெற்றோல்  ஒரு லீட்டரின் விலையை 20 ரூபாவிலும், டீசல் ஒரு லீட்டரின் விலையை 30 ரூபாவிலும் அதிகரிக்குமாறு வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் யோசனை முன்வைத்துள்ளோம்.

இவ்விடயம் குறித்து நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளதாலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.

பல்வேறு காரணிகளினால் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளன.உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றத்தை குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கும்,மக்கள் வங்கிக்கும் சுமார் 652 பில்லியன் கணக்கில் கடன் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் எரிபொருள் விலையேற்றத்தை அதிகரிப்பதை தவிர்ந்த  பிறிதொரு தீர்வு கிடையாது.

பெற்றோல் ஒரு லீட்டரின் விலையை 20 ரூபாவிலும்,டீசல் ஒரு லீட்டரின் விலையை 30 ரூபாவிலும் அதிகரிக்குமாறு சக்தி வலுத்துறை அமைச்சரிடம் யோசனை முன்வைத்துள்ளோம்.

 அல்லது விலை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமாயின் நெருக்கடி நிலையை சமாளிக்க திறைச்சேரி ஊடாக நிதி வழங்கப்பட வேண்டும்.

இவ்விரு தீர்மானங்களில் ஒன்றை கட்டாயம் விரைவில் செயற்படுத்த வேண்டும் என்றார்.

எரிபொருள் இறக்குமதிக்காக அதிகளவில் அந்நிய செலாவணி செலவிடப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்கமதிக்காக 3,677 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது.கொவிட்-19 தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த போதும்,உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்திருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு 3,677 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது என்றார்.