ஒழுக்கமற்ற நடத்தைகளையுடைய உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் - தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தல்

By Digital Desk 2

23 Oct, 2021 | 05:24 PM
image

எம்.மனோசித்ரா

ஒழுக்கமற்ற முறையில் செயற்படுகின்ற சில உள்ளுராட்சி உறுப்பினர்களின் நடத்தைகளால் ஜனநாயகம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நம்பிக்கை முழுமையாக சரிவடைந்துள்ளது.

எனவே இவ்வாறானவர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் செயலாளர்களும் , ஆளுநர்களும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்திய விடயங்கள் குறித்து தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சில உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளினால் நாட்டின் ஜனநாயகம் தொடர்பிலும் , மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரிதிநிதிகள் தொடர்பிலும் அத்தோடு அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பிலும் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நம்பிக்கை முழுமையாக சரிவடைந்துள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அவற்றில் தவறிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

எனவே இவ்வாறான பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் செயலாளர்கள் இவை தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய ஒழுக்காற்று நடவக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறான ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக ஆளுநர்களின் அதிகாரத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right